👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை அமல்படுத்த இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் வியாழக்கிழமை (ஜூன் 6) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹெல்மெட் அணியாதோரின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கட்டாய ஹெல்மெட் சட்டம் பெங்களூரு, தில்லி போன்ற நகரங்களில் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
இதுபோன்ற பெரு நகரங்களிலேயே இந்த சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்படும் போது தமிழகத்தில் ஏன் செய்ய முடியவில்லை? என்றும் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த தமிழக அரசு, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.100ல் இருந்து அதிகரிக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று கூறினர்.
போக்குவரத்து காவலர்களும், காவலர்களும் கூட ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிபதிகள் கூறியதற்கு, ஹெல்மெட் அணியாத காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என்று அரசு பதில் அளித்தது.
மேலும், கட்டாய ஹெல்மட் சட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு புதன்கிழமை வரை அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாத காரணங்களால் தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன.
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் சமீப காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 51 லட்சம் வாகனங்களில், 2 கோடியே 11 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன.
ஹெல்மெட் அணியாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 91 ஆக இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 956 ஆக குறைந்துள்ளது.
எனவே, இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ஏன் தீவிரமாக அமல்படுத்தவில்லை;
அரசாணையை மட்டும் பிறப்பித்து விட்டு அரசு அமைதியாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்து, தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி, மற்றும் போக்குவரத்து துறைச் செயலாளர் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழககத்தில் தலைகவசம் அணிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியதோடு, திங்கள்கிழமை அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்தனர். இந்த வாகனத்தை ஓட்டியவர் தலைக்கவசம் அணியவில்லை என வேதனை தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில், தலைக்கவசம் அணிவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும், சட்டவிரோதமாக இருசக்கர வாகனப் பந்தயங்களில் ஈடுபடுபவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U