‘உலகம் வெப்பமயமாவதும் ஃபானி புயல் உணர்த்தும் உண்மையும்’ : என்ன செய்ய போகிறோம்?- ஒரு எச்சரிக்கை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2019

‘உலகம் வெப்பமயமாவதும் ஃபானி புயல் உணர்த்தும் உண்மையும்’ : என்ன செய்ய போகிறோம்?- ஒரு எச்சரிக்கை தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஃபானி புயல் உருவாக முக்கிய காரணியாக இருப்பதே, புவிவெப்பமடைவதால் நேர்ந்த தாக்குதல், இனி வரப்போகும் பேராபத்துகளை எதிர்கொள்வது எப்படி?, இதை தடுக்க என்ன செய்யவேண்டும், என்பதை உணர்த்தும் தகவல். இதுகுறித்து பசுமை தாயகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை தகவல்:
வழக்கத்தில் இல்லாத காலத்தில், வழக்கத்தில் இல்லாத வேகத்தில் ஃபானி புயல் ஒடிசாவை தாக்கியது. புவி வெப்பமடைவதால் நேர்ந்துள்ள பேராபத்தின் அடையாளம் இதுவாகும். இதுபோன்ற புயல்கள், இன்னும் வலிமையாக இனிவரும் ஆண்டுகளில் கிழக்குக் கடற்கரையை தாக்கும். இன்று ஒடிசாவுக்கு நேரும் சவாலை விட கடுமையான புயல்கள் தமிழ்நாட்டையும் தாக்கும் காலம் வரலாம். ஃபானி புயலைப் போன்ற, காலநிலை மாற்றத்தின் பெரும் கேடுகளை எதிர்கொண்டு மனித இனம் பூமியில் பிழைத்திருக்க வேண்டும் என்றால் - போர்க்கால அடிப்படையில் மிக வேகமான நடவடிக்கைகளை அரசும் மக்களும் இணைந்து மேற்கொண்டாக வேண்டும். அரசுகளின் செயல்பாட்டிலும் மக்களின் வாழ்க்கை முறையிலும் தலைகீழ் மாற்றம் உடனடியாக தேவை.
'எதிர்கால பேராபத்துகளை எவ்வாறு சமாளிப்பது, இழப்புகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது, பேரிழப்புகள் அதிகரிக்காமல் முன்கூட்டியே எவ்வாறு தவிர்ப்பது' -என்கிற எல்லா வழிமுறைகளும் இன்றைய உலகின் கொள்கை வகுப்பாளர்களுக்கு நன்றாக தெரியும்! பேராபத்துகளை தவிர்த்து, எல்லா மக்களுக்கும் வளமான வாழ்க்கையை உருவாக்கும் நுட்பங்கள் அனைத்தும் - இன்றைய அறிவியல் உலகில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால்,அவற்றை செயல்படுத்தும் அரசியல் வலிமைதான் மிகப்பெரிய பற்றாக்குறையாக உள்ளது. அதாவது, உலகம் அழியாமல் காத்து, அதனை வளமானதாக மாற்றுவது சாத்தியமானது தான். ஆனால், அந்த சாதனையை செய்வதற்கு உலக நாடுகளின் அரசுகள் முன்வருமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி!
உலகை காப்பாற்ற தடையாக இருப்பது யார்? கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை தான் உலகைக் காப்பாற்ற பெரும் தடையாக இருக்கிறது . உலக நாடுகளை கட்டுப்படுத்துவது மக்கள் இல்லை. இந்த பகாசூர கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் உலகை இயக்குகின்றன. இந்த பெருநிறுவனங்களின் இலாபம் குறையும் என்கிற ஒரே காரணத்துக்காக - உலகை காக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன. குறிப்பாக, பெட்ரோலியம் சார்ந்த நிறுவனங்கள், பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள்,கார் தயாரிப்பு நிறுவனங்கள், நிலக்கரி மற்றும் அனல்மின் நிறுவனங்கள், பெரும் கட்டுமான நிறுவனங்கள் - இவைதான் உலகை காப்பாற்ற தடையாக உள்ளன. மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள வங்கிகள், பெரும் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரும் முட்டுக்கட்டை போடுகின்றனர். மிகவும் குறிப்பாக - இந்த கார்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் அமெரிக்க நாடு மிகப்பெரிய வில்லனாக உள்ளது. இந்த சூழலில் - உலகின் மிகப்பெரிய பேராபத்தான காலநிலை மாற்றம் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் அனைவரும் அறிந்துகொள்வது அவசியம் ஆகும்.
புவிவெப்பமடைதல் என்றால் என்ன? நிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து விட்டது. இதனால், பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இவ்வாறு புவியின் மேற்பரப்பு வெப்பநிலை மனித செயல்களால் அதிகரிப்பது புவிவெப்பமடைதல் (Global Warming) எனப்படுகிறது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும். வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 277 ppm (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி) அளவாக இருந்தது. உலகின் தாங்கும் அளவு என்பது 350 ppm தான். அதுவே, 450 ppm வரை போனால் உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு உள்ளது.
அதற்கு மேலே சென்றால் - உலகம் பேரழிவை சந்திக்கும். தற்போது 410 ppm ஆக இருக்கிறது! இன்றைய சூழலில் 450 ppm அளவுக்கு கீழே கட்டுப்படுத்தும் போக்கில் உலகநாடுகள் செல்லவில்லை! காலநிலை மாற்றத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தான் முக்கிய காரணம் ஆகும். கடந்த 150 ஆண்டுகளில் புவியின் வளிமண்டலத்தில் கலக்க விடப்பட்ட கரியமில வாயுவில் 22% அமெரிக்க நாட்டிலிருந்தும், 18% ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், 13% சீனாவில் இருந்தும் கலக்க விடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருந்தும் இந்தியாவின் பங்கு 6% அளவு மட்டுமே. புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் - என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. ஃபானி புயல் இதில் ஒரு அங்கம் தான். இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் இனி இன்னும் அதிகமாகும். பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை தற்போதைய 1 டிகிரி செல்சியஸ் அளவில் இருந்து - இனி 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் - மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக மனித இனமே முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.
என்ன செய்ய வேண்டும்? காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்வதற்கு, இன்றைய கார்ப்பரேட் உலகம் கற்பனை செய்வதற்கே அஞ்சும் தீர்வினை ஐநா அறிவியலாளர்கள் குழு (IPCC - Intergovernmental Panel on Climate Change) முன்வைத்துள்ளது. பெட்ரோல், டீசல்,நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவற்றால் வெளியாகும் கரியமில வாயுவை போர்க்கால அடிப்படையில் குறைத்தாக வேண்டும் என்பதே அந்த தீர்வு ஆகும். 'உலகம் அழியாமல் காப்பாற்ற மிகவும் குறுகிய கால அவகாசமே உள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் மிக வேகமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இந்த அவகாசத்திற்குள் உலகை அழியாமல் காப்பாற்ற இயற்பியல் ரீதியாகவும், வேதியியல் ரீதியாகவும் முடியும். ஆனால், அரசியல் ரீதியில் இதை செய்ய முடியுமா என்பதை உலக நாடுகளும் உலக மக்களும் தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். 'அடுத்து வரும் பத்தாண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பலநூறு தலை முறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்' என்று கடந்த 2018 அக்டோபர் மாதம் ஐநா அவையின் அறிவியலாளர்கள் குழு (IPCC) அறிவித்தது.
பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் கார்களை ஒழிப்பது சாத்தியமா? அறிவியல் ரீதியில் சாத்தியமா என்று கேட்டால் - நிச்சயம் சாத்தியமானது தான். ஆனால், அதற்கேற்ப உலக மக்கள் அனைவரும் தமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி. காடுகளும், கடலும், பசுமை வெளிகளும் எந்த அளவு கரியமில வாயுவை எடுத்துக்கொள்ளுமோ, அந்த அளவை விட அதிகமாக மனிதர்களால் கரியமிலவாயு வெளிவிடப்படக் கூடாது என்கிறது ஐநா அறிக்கை. உலகின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமூகமும் தமது வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றினால் மட்டுமே இது நடைமுறையில் சாத்தியமாகும். அடுத்த 8 மாதங்களில் - 2020 ஆம் ஆண்டிற்குள் - பெட்ரோல், டீசல், நிலக்கரி,எரிவாயு பயன்பாட்டின் மூலமாக வெளியாகும் கரியமிலவாயு அளவினை, தொடர்ந்து அதிகரிக்காமல் கீழ் நோக்கி திருப்ப வேண்டும். அதாவது, இவற்றின் பயன்பாடு ஆண்டுக்காண்டு அதிகமாகி செல்வதற்கு 2020-ல் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பின்னர் 2030 ஆம் ஆண்டுக்குள் இவற்றின் பயன்பாட்டை மிக வேகமாக குறைக்க வேண்டும். 2050 ஆண்டில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு நடக்க வேண்டும் என்றால் - நிலப்பயன்பாடு, மின்சாரம் மற்றும் ஆற்றல் பயன்பாடு, தொழிற்சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து, நகரங்கள் ஆகியவற்றில் உலகின் ஒவ்வொரு நாடும் மிக வேகமாக, மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு உடனடியாக மாற வேண்டும். உண்மையில் அடுத்த பத்தாண்டுகளில் இவை எல்லாவற்றையுமே நடைமுறையில் சாத்தியமாக்கினால் மட்டுமே - மனித இனம் தொடர்ந்து பூமியில் வாழ முடியும். அதனால் தான், அடுத்து வரும் பத்தாண்டுகள் தான் - இனி இந்த பூமியில் வாழப்போகும் பலநூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
தற்போதைய காலநிலை அரசியல் நிலவரம் என்ன? இன்றைய உலக சூழலில், புவிவெப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்னவெல்லாம் இருக்கின்றன, அந்த வாய்ப்புகளால் ஏற்படப்போகும் விளவுகள் எவ்வாறாக இருக்கும் என்பதற்கான கணிப்புகள் ஐநா சபையால் வெளியிடப்பட்டுள்ளன: 5 டிகிரி செல்சியஸ்: இன்றைய உலகின் ஆடம்பர வாழ்க்கை முறை இப்போது இருக்கும் நிலையில் தொடர்ந்தால் - வெப்பநிலை அதிகரிப்பு 5 டிகிரி செல்சியசை கடக்கும். அப்படி நடந்தால், உலகில் மனித இனம் உயிர்பிழைத்திருக்க முடியாது. அடுத்த சில தலைமுறைகளில் எல்லாம் முடிந்துவிடும்.
4 டிகிரி செல்சியஸ்: ஒவ்வொரு நாடும் தத்தமது நாட்டில் வெளியாகும் கரியமிலவாயு அளவை குறைக்க 2015 ஆண்டின் பாரிஸ் உடன்படிக்கை மூலம் ஒப்புக்கொண்டன. அந்த வகையில், ஒவ்வொரு நாடும் அளித்துள்ள வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றினால், வெப்பநிலை அதிகரிப்பு 4 டிகிரி செல்சியசை எட்டிப்பிடிக்கும். அப்படி நடந்தாலும் கூட உலகில் மனித இனம் உயிர்பிழைத்திருப்பது கடினம் தான். 2 டிகிரி செல்சியஸ்: '2015 பாரிஸ் உடன்படிக்கை கூறிய படி 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்' என்பதற்கான செயல்திட்டம் 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் இறுதி செய்யப்பட்டது. அமெரிக்க நாடு தவிர்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு முதல் பாரிஸ் உடன்படிக்கை செயல்படுத்தவுள்ளன. ஆனால், இதுவும் கூட பாதுகாப்பான அளவு இல்லை.
1.5 டிகிரி செல்சியஸ்: பாரிஸ் உடன்படிக்கை கூறும் 2 டிகிரி செல்சியஸ் கூட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 1.5. டிகிரி செல்சியஸ் அளவுதான் ஓரளவுக்கு சமாளிக்க கூடியது ஆகும் (அதற்கும் கீழாக குறைப்பது அறிவியல் பூர்வமாக சாத்தியம் இல்லை). (தற்போதைய 1 டிகிரி செல்சியல் அதிகரிப்பால் - உலகெங்கும் பெரும் மழை,கடும் சூறாவளி, மிகப்பெரிய வெள்ளம், வரலாறு காணாத வறட்சி, காட்டுத் தீ,நோய்களில் தாக்குதல் என பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. எனவே,அறிவியலாளர்கள் கூறும் 1.5. டிகிரி செல்சியஸ் என்பதும் கூட, இப்போது இருப்பதை விட அதிகமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியது தான் என்பது கவனிக்கத் தக்கதாகும்.) மொத்தத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் இனி தவிர்க்க முடியாதவை. அவற்றை கட்டுக்குள் வைத்து, பூவுலகில் மனித வாழ்க்கை இனிவரும் காலத்திலும் தொடர வேண்டும் என்றால் - அதற்கு 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும்.
பாரிஸ் உடன்படிக்கை: உலகை காப்பாற்றுமா? பூமிப்பந்தின் மேற்பரப்பு வெப்பநிலை நிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவது என்றும், அதையே 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது என்றும் 2015 ஆம் ஆண்டில் COP 21 மாநாட்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Agreement) எட்டப்பட்டது. 2015 பாரிஸ் உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கன செயல்திட்டத்தை கடந்த 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP 24 - UN Climate Change Conference 2018, Katowice, Poland) உலக நாடுகள் அனைத்தும் கூடி இறுதி செய்தன. இந்த முடிவின் மூலம் 2015 -ம் ஆண்டின் பாரிஸ் உடன்படிக்கையானது 2020-ம் ஆண்டுமுதல் உலகின் எல்லா நாடுகளிலும் செயலுக்கு வருகிறது. இதற்கான தேசிய திட்டத்தை உலகின் அத்தனை நாடுகளும் (அமெரிக்கா தவிர) உருவாக்கி செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இன்றைய கணக்கின் படி, பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதி 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பை ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. எனவே, ஒவ்வொரு நாடும் தாம் ஒப்புக்கொண்ட அளவை அதிகமாக்கும் நோக்கில், ஐநா காலநிலை சிறப்பு மாநாடு 2019 செப்டம்பரில் நியூயார்க் நகரில் கூடுகிறது. கார்ப்பரேட் பேராசையை ஒழித்து, மக்களின் நலனை, இயற்கை பாதுகாப்பை,எதிர்கால தலைமுறையினரின் வாழும் உரிமையை முன்னால் வைக்காவிட்டால் - உலகின் அழிவை இனியும் தடுக்க முடியாது.
அவசர ஊர்தி என்பது உயிரை காக்காவிட்டால், அதனால் பயன் எதுவுமில்லை. தீயணைப்பு வண்டி என்பது தீயை அணைக்காவிட்டால் அதன் பெயருக்கு பொருள் எதுவும் இல்லை. கார்ப்பரேட் பேராசையையும் - நிலக்கரி, பெட்ரோல், டீசல்,எரிவாயு, கார்கள் எனும் காலநிலை அழிவுசக்திகளையும் ஒழிக்காவிட்டால், ஐநா காலநிலை மாநாடுகளுக்கும் அதன் உடன்படிக்கைகளுக்கும் ஒரு மதிப்பும் இருக்காது! தீமை அழியும். நன்மை வெல்லும். அந்த நம்பிக்கையுடன் அதனை நோக்கி பாடுபடுவோம். இவ்வாறு பசுமைத் தாயகம் தகவலில் உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews