👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ஓர் இனிய செய்தியைத் தாங்கி வெளி வந்துள்ளது, ‘ஐ.ஏ.எஸ்.' உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ‘யு.பி.எஸ்.சி.' தேர்வு முடிவு. 2018-ம் ஆண்டுக்கான அகில இந்தியத் தேர்வில், மும்பையைச் சேர்ந்த தலித் இளைஞர் முதல் இடம் பிடித்து உள்ளார்.
ஒரு காலத்தில் கல்வி, சம உரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், சக போட்டியாளர்கள் அனைவரையும் விஞ்சி நின்று, முதல் இடம் பிடித்து இருக்கிறார். ஏற்கெனவே 2015-ம் ஆண்டிலும், ‘டினா டாபி' என்ற தலித் இளைஞர்தான் அகில இந்திய அளவில் முதலிடம். கல்வியில் மட்டுமன்றி, போட்டித் தேர்வுகளிலும் சிறந்து விளங்கும் இளைஞர்கள் விடுத்து இருக்கும் இச்செய்தி, உண்மையில் அபாரமானது.
‘எட்டும் அறிவினில் யாரும், யாருக்கும் இளைத்தவர்கள் அல்லர்' என்கிற உண்மையை, ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இளைய இந்தியாவின் புதிய நம்பிக்கை, மாற்றத்தின் அடையாளம் - இவ்விளைஞர்கள்.
இதே போன்று, இந்தியாவின் மிகத் தரமான, மிகக் கடினமான போட்டித் தேர்வில் இம்முறை, கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ், பெற்றிருக்கும் வெற்றியும் தனித்து நிற்கிறது. ‘வயநாடு' மாவட்ட பழங்குடிஇனத்தில் தோன்றி, குடிமைப்பணிக்குத் தேர்வாகி உள்ள முதல் பழங்குடியினப் பெண் இவர்.
தனது அறிவுத் திறனையும் கடின உழைப்பையும் மட்டுமே கொண்டு, வென்று காட்டி உள்ள ஸ்ரீதன்யா, தனது 23-வது வயதிலேயே, தேர்ச்சி பெற்று, அரசுப் பணி ஏற்க இருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டின் மிக இளைய வெற்றியாளராக இவர் இருக்கலாம். இதுவும் மிக நல்ல செய்தி.
ஏறத்தாழ 37 ஆண்டுகள் பணிக்காலம் கிடைப்பதால், இந்தியாவின் மிக உயரிய நிர்வாகப் பொறுப்பு, இவரைத் தேடி வரப் போகிறது. குடிமைப் பணிகளில், பணி உயர்வில் சமூக ஒதுக்கீடு இல்லை. ஆகவே, இயன்ற வரை இளைய வயதில் ‘யு.பி.எஸ்.சி.' தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, தலைமைச் செயலாளர் போன்ற உயர் நிலைப் பதவிகளுக்கு வர முடியும்.
மேற்கு தமிழகத்தில், அந்தியூர், சத்தியமங்கலம் போன்ற, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஊர்களில், இலவசப் பயிலரங்குகளில் இளைஞர்களிடம் உரை
யாடுகிற நல் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில், போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இங்கெல்லாம், இன்னமும் தீவிரமாகக் கொண்டு செல்லப் பட வேண்டும்.
அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்து, குடிமைப் பணித் தேர்வையும் தமிழிலேயே எழுதி வெற்றி பெற்று கடந்த ஆண்டு ‘ஐ.ஏ.எஸ்.' அலுவலரான மணிகண்டன் போன்றோர், தொடர்ந்து இளைஞர்களைத் தேர்வுக்குத் தயார் செய்து வருகின்றனர். ஆனாலும் நாம் இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அலுவலர் தோன்றியபோது, இளைஞர்கள், குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவியர் மத்தியில் அது, பெரிய அளவில் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. அதே போன்ற ஒரு நல்ல அறிகுறியாகத் தற்போது, ஸ்ரீ தன்யா சுரேஷ், உயர்ந்து நிற்கிறார். ஆதிவாசிகளின் வாழ்வாதாரம், உரிமைகள் பற்றிய குரல்கள் வெகுவாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், அவர்களின் பிரதிநிதியாக ஒருவர், குறிப்பாக ஒரு பெண், அரசு நிர்வாகத்தில் உயர்நிலையில் பொறுப்பு வகித்தல், அவர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் வகையில் அமையும்.
இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து குடிமைப் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, சற்றே குறைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே இந்தப் போக்கு நீடிக்கிறது. இது வருத்தம் அளிக்கவே செய்கிறது.
இன்றைய இளைஞர்களிடம், கேளிக்கைகளின் மீது நாட்டம், தேவையற்றதின் மீதான ஈர்ப்பு, மேலோங்கி இருக்கிறது; பாடப் புத்தகங்களைத் தாண்டி பொது அறிவுக்கான தேடல், அதற்கான முயற்சி, குறைந்து வருகிறது.
போட்டித் தேர்வுப் பயிற்சி அளிப்பதில் அரசு காட்டி வரும் ஆர்வம், சமூகப் பொறுப்புணர்வுடன், இலவசப் பயிற்சி மையங்கள் வழங்கி வரும் தரமான வகுப்புகள், கடந்த ஆண்டுகளின் சாதனையாளர்கள் அளித்து வரும் தன்னலமற்ற வழிகாட்டுதல்கள், ‘இந்து தமிழ் திசை' போன்ற தமிழ் நாளேடுகள் முன்னெடுத்து வரும் சீரிய முயற்சிகள் காரணமாய், ‘ஐ.ஏ.எஸ்.' தேர்வில், தமிழ்நாட்டின் பங்களிப்பும், சாதனையும் தொய்வின்றித் தொடரும் என்று திடமாக நம்பலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்