👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி சராசரியாக 70.90 % வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்குப்பதிவு தொடர்பாக பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மக்களவைத் தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி 70 புள்ளி 90 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.
அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 % வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 57 புள்ளி 05 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார். இதே போன்று 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் அதிக பட்சமாக அரூர் தொகுதியில் 86 புள்ளி 96 % வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60 புள்ளி 87 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம்
* வாக்குச்சாவடிகளில் 9 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் 410க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டு இயந்திரங்கள் கோளாறு, மாநிலம் முழுவதும் பஸ் திடீர் ரத்து போன்ற பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நேற்று நடந்த தேர்தலில், 38 மக்களவை தொகுதிகளிலும் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 66,699 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற வாக்குப்பதிவின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க 160 கம்பெனி துணை ராணுவ வீரர்களும், சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி தேர்தல் உயர் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டனர். வெப்கேமரா பொருத்தப்படாத இடங்களில் வாக்குப்பதிவுகள் முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. 410 இடங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. அதேபோன்று பூத் சிலிப் இல்லாததால், பொதுமக்கள் எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் தடுமாறினர். இதனால், பல இடங்களில் குழப்பமான நிலை ஏற்பட்டது. வெளியூர்களில் வேலை செய்கிறவர்கள் ஊர்களுக்கு போக போதிய பஸ்கள் இல்லாமல் தவித்தனர்.
பல இடங்களிலும், வாக்குச்சாவடிக்கு வந்த வயதானவர்கள் 9 பேர் இறந்துள்ளனர். வயது முதிர்ச்சி, வெயில் கொடுமை காரணமாக இவர்கள் மரணம் நேரிட்டுள்ளது. ஆம்பூரில் அதிமுக, அமமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடந்தது. அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட மேல்விஷாரத்தில் மோதலை கட்டுப்படுத்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கன்னியாகுமரி அருகே நடந்த மோதலில் 4 பேருக்கு கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டது.
மற்ற இடங்களில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்றவாக்குப்பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 66,699 வாக்குச்சாவடி மையங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. அதிகமாக ஆரணி மக்களவை தொகுதியில் 36.51 சதவீதமும், குறைந்த அளவாக மத்திய சென்னையில் 22.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. மதுரையில் 25.41 சதவீதம் பதிவானது.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுகள் கணிசமாக உயர்ந்து, மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில் தமிழகத்தில் 73.68 சதவீதம் சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதேபோன்று, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கள்ள ஓட்டு போட்டதாக எந்த புகாரும் இல்லை. கடலூரில் ஒரு வேட்பாளர் பெயர் அருகே இருந்த பட்டன் வேலை செய்யவில்லை என்ற புகார் வந்ததும், அந்த இயந்திரம் மாற்றப்பட்டு, பிரச்னை சரி செய்யப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. எங்கும் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாக தகவல் இல்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் பெரிதாக எங்கும் நடைபெறாமல், எல்லா இடத்திலும் அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நேற்று மாலை 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் ஏராளமானோர் சென்னையில் இருந்து ஓட்டுப்போட சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் வாக் காளர்களிடம் அடையாள அட்டை உட்பட பல்வேறு ஆவணங்கள் இருந்தும் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை. அந்த வகையில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர் கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இத னால் அதிர்ச்சி யடைந்த அவர்கள் அதிகா ரிகளி டம் வாக்குவாதம் செய்தனர்.
ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரத்தில், வாக்குப்பதிவின் இறுதி நேரத்தில், வாக்குப்பதிவு மையத்துக்கு வெளியே இரண்டு பிரிவுகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அப்போது, ஒருமுறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. மேலும், வாக்குப்பதிவு மையங்களை கையகப்படுத்தும் சம்பவம் தமிழகத்தில் எங்கும் நடைபெறவில்லை. அதனால் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி புகார் அளித்தால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.
தற்போது 3, 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கும், சுற்றுலாவுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையம் சார்பாக போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுப்பது இல்லை. பொதுமக்கள்தான், நமக்கு எங்கு ஓட்டு இருக்கிறது என்பதை பார்த்து, அங்கே போய் ஓட்டு போட வேண்டும். அவர்கள்தான் முன்கூட்டியே திட்டமிட்டு ஊருக்குபோய் ஓட்டு போடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகம் முழுவதும் நேற்று மாலை வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்தின் பிரதான கதவுகள் அடைக்கப்பட்டது. 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவு 9 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் சராசரியாக 70.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தமிழகத்தில் மொத்தமுள்ள 66,699 வாக்குப்பதிவு மையங்களிலும் நேற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்துக்கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, அந்தந்தந்த தொகுதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டிராங் ரூமுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை கதவுகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த அறை முழுவதும் துணை ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களை தொடர்ந்து, தமிழக போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அரசியல் கட்சி ஏஜென்டுகள் அங்கு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். நேற்று பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற மே 23ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கும். முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் 10 மணி தெரியவரும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U