TRB: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 15, 2018

TRB: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்

பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்கள். அதேபோல், திருச்செந்தூர் நூலகத்தின் நூலகர் மாதவன் உள்பட 33 பேருக்கு சிறந்த நூலகர் விருதும், நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய 31 மாவட்ட வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர் விருதும், மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், அதிக புரவலர்கள் மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற 12 நூலகங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும். வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும். அதேபோல், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றும்போது வழக்கு போடுகிறார்கள். அது முடிய 6 மாத காலம் ஆகிவிடுகிறது. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது.
அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம். ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஆசிரியர் தேர்வுகள் (டி.ஆர்.பி.), பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews