அறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 26, 2018

அறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம்

(S.Harinarayanan PG Teacher GHSS Thachampet) தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது.
குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர்.
விரல்ரேகை மாறுமா? தாயின் கர்ப்பப்பையில் கருவாக இருக்கும்போதே நம் விரல்களின் ரேகை உருவாகிவிடும். கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு 17-வது வாரத்தில் கைரேகைகள் தோன்றும். இந்த ரேகை அமைப்பு தோலின் புறத் தோல் (Epidermis), அடித் தோல் (Dermis) ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்திருக்கிறது. இதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாகக்கூட மாற்ற முடியாது. அதேபோல, ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு, மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது.
ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கைரேகையும் தனித்தன்மை கொண்டது. ஒருவரின் வாழ்நாள் முழுக்க அவருடைய ரேகையில் பெரிதாக மாற்றம் இருக்காது. வயது, கைகளைப் பயன்படுவதற்கேற்ப கைரேகையில் தேய்மானம் ஏற்படலாம்; ஆனால், மாற்றம் ஏற்படாது. கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி. இவர் 1890-ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர். 1901- ம் ஆண்டில் ஸ்காட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல்துறை ஆணையரான அவர் 1918-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். கைரேகைகளை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக். ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது.
ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரே கையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை `பளிச்'சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள், கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற் கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள். கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப் படும்போது அது எண்ணைப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது. அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஏற்கனவே காவல்துறையினர் வசம் இருக்கும் குற்ற வாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
கைரேகைகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன, தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம். சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews