நீட் பயிற்சியால் ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்களை மருத்துவராக்க நடவடிக்கை: அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

நீட் பயிற்சியால் ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்களை மருத்துவராக்க நடவடிக்கை: அமைச்சர்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 413 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மூலம் 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவற்றின் மூலம் வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் மாணவர்களேனும் மருத்துவராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2017-18-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுத் தந்த அரசு, உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் "சாதனையாளர் தினம்' என்ற பெயரில் ரொக்கப் பரிசுடன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், விருது வழங்கி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக, எதிர்கால இந்தியாவுக்கு கல்வித் துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநில முதல்வரின் அனுமதி பெற்று அடுத்த வாரத்தில் கல்வியாளர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையா டல் நடத்தப்படும். பள்ளிகளில் ஆசிரியர்களின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகமாக அளிக்கப்படுகிறது.
வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் வருகை குறைவாக இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்விரு மாவட்டங்களில் மாணவர்களின் பெற்றோர் அண்டை மாநிலங்களுக்கு வேலைதேடி செல்வது அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரிவிக்க முதல்கட்டமாக 50 பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் ஆயிரம் பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். நீட் பயிற்சி மையங்களில் சேர குறைந்த கால அவகாசம் இருந்ததால் கடந்த ஆண்டு 5 ஆயிரம் பேர் மட்டுமே பயிற்சி பெற்றனர். இவ்வாண்டில் 413 மையங்கள் மூலம் 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் ஆண்டில் நீட் தேர்வு மூலம் குறைந்தது ஆயிரம் பேராவது மருத்துவராகும் வாய்ப்பு ஏற்படும்.
ஜிஎஸ்டி வந்ததால் நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக் கை உயர்ந்துள்ளது. ஆனால், பட் டயக் கணக்காளர் எண்ணிக்கை 2.85 லட்சமாக மட்டுமே உள்ளது. பட்டயக் கணக்காளர் எண்ணிக்கை உயர்த்த சி.ஏ. படிப்புக்கான பயிற்சி மையங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்தப்படும். இவற்றில், 500 பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். அந்தவகையில், தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை நிச்சயம் ஏற்படுத்தப்படும் என்றார் அவர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
பள்ளிக் கல்வியில் பின்தங்கிய வேலூர் மாவட்டம் ஆசிரியர்களின் முயற்சியால் சற்று முன்னேறியிருப்பது பாராட்டுக் குரியது. கல்விதான் நாட்டை மாற்றும் சக்தி படைத்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வித் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும் பொறுப்பு வகிக்கின்றன. கல்வி வளர்ச்சிக்கு இவ்விரு அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அங்கு ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி மூலமே அமையும். பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் தேர்ச்சி பெறவைக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. அதற்கு திறமையான ஆசிரியர்கள் தேவை. அதற்கான பயிற்சியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
உலகில் பள்ளிக் கல்வியில் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆசிரியர் பயிற்சி 4 ஆண்டு களாகும். அங்கு அரசு உயர்பதவியைவிட ஆசிரியர் பதவிக்கே மதிப்பு அதிகம். அந்நாட்டில் மக்கள் ஆசிரியராகவே விரும்புகின்றனர். நமது நாட்டில் சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சி நிறுவனங்களைச் சீரமைக்க வேண்டும். ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். தமிழகத்தில் பள்ளிக் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, விஐடி நிலையான ஊரக வளர்ச்சி, ஆராய்ச்சி கல்வி மையப் பேராசிரியர் சி.ஆர்.சுந்தரராஜன் வரவேற்றார். மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மார்ஸ் நன்றி கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews