உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் காத்துக்கிடந்த ஓய்வூதியதாரர்கள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 13, 2018

உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் காத்துக்கிடந்த ஓய்வூதியதாரர்கள்!!

தமிழகத்தில் அரசு துறை நிறுவனங்கள், துணை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், ஓய்வுபெற்றவர்களின் குடும்பத்தினர் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது மாத ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் உயிர்வாழ் சான்றிதழை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால் தான், தங்குதடையில்லாமல் மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும்.
தற்போது, உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வருங்கால வைப்புநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நவம்பர் முதல் டிசம்பர் கடைசி வரை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே ஜனவரி மாதம் முதல் அடுத்த ஓராண்டுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும் உயிர்வாழ் சான்றிதழை வருங்கால வைப்புநிதி அலுவலகங்கள், ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகள், இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் நேரடியாக சென்று பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல வங்கி கிளைகளில் கைரேகையை பதிவு செய்வதற்கான கருவி இல்லை. இதனால், முதியோர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதேபோல், பல இ-சேவை மையங்களிலும் கைரேகையை பதிவு செய்யாமல், ஓய்வூதியதாரர்களை திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களையே நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு அளவுக்கு அதிகமானோர் தினமும் வருவதால், டோக்கன் வாங்கிக் கொண்டு காலை முதல் இரவு வரை தள்ளாத வயதிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் இதேநிலையே காணப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்புநிதி சென்னை மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று சுமார் 2 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் காலை முதலே குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கி ஊழியர்கள் வரிசையாக நிற்கவைத்தனர். காலை முதலே ஓய்வூதியதாரர்களின் கைரேகை பதிவு பெறப்பட்டாலும், மாலை வரை கூட்டம் குறையவில்லை. அனைவரும் வயதானவர்கள் என்பதால், நிற்பதற்கே சிரமப்பட்டனர். பலர் தள்ளாடியபடி நின்றனர். நிறைய பேர் மதிய சாப்பாட்டையும் உட்கொள்ளாமல் வரிசையில் காத்துக்கிடந்தனர். பலருடைய கைரேகை பதிவை எந்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், அவர்களது கண் கருவிழி பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற குறைபாடுகளால் அதிக நேரமானது.
இதுகுறித்து, ஓய்வூதியதாரர்கள் சிலர் கூறும்போது, “நாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி இல்லை. அதனால், அங்கு முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் இங்கு வரவேண்டியதாகி விட்டது. காலை முதலே வரிசையில் வந்து காத்திருக்கிறோம். இன்னும் கைரேகையை பதிவு செய்தபாடில்லை. ஓய்வுபெற்ற பிறகும் நாங்கள் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். எனவே, டிஜிட்டல் முறையில் கைரேகை பெறுவதற்கு முதலில் அனைத்து வங்கி கிளைகளிலும், இ-சேவை மையங்களிலும் அதற்கான வசதிகளை முதலில் செய்துகொடுக்க வேண்டும். வருங்கால வைப்புநிதி அலுவலகங்களிலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து கைரேகை பதிவை துரிதப்படுத்த வேண்டும்” என்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews