ஆசிரியர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதில் தாமதம்: மாதாந்திர குறை தீர்ப்பு முகாம்கள் தீர்வு தருமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 16, 2018

ஆசிரியர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதில் தாமதம்: மாதாந்திர குறை தீர்ப்பு முகாம்கள் தீர்வு தருமா?

உரிய பலன்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள மாதாந்திர குறை தீர்ப்பு முகாம்கள் மூலம் குறைகள் களையப்படுமா? என்று எதிர்பார்க்கின்றனர், ஆசிரியர்கள்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன், பணிப்பலன் மற்றும் இதர பலன்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி பேரூர் கல்வி மாவட்டச் செயலர் எம்.ராஜசேகரன் கூறியதாவது: அரசாணை 42-ன் படி உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு தங்களது பணி காலத்தில் தலா 6 சதவீதம் இருமுறை ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். அவ்வாறு வழங்க வேண்டிய ஊதிய உயர்வானது பல இடங்களில் நிலுவையில் உள்ளது. இதுபோல் உயர்கல்விக்கு முன் அனுமதி வழங்குவதற்கு ஓராண்டு முதல் இரண்டாண்டு வரை காலதாமதம் ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு கோவை மாவட்டத்தில் சில ஒன்றியங்களில் இன்னும் ஆசிரியர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் சிறப்புநிலை பெறும் போது, அவர்களின் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது.
அச்சோதனையை முடித்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அந்த நிலைகளை அடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டு முதல் இரண்டாண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இவற்றை உரிய காலத்தில் கல்வித்துறை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகளின் படி, ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணம், பணிப்பலன் மற்றும் இதர பலன்களை தாமதமின்றி பெறும் வகையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாம் நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து எவ்வித விண்ணப்பமும் பெறாத நிலையை உருவாக்கி, மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறும்போது, பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆசிரியர் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர் தலைமையில் முகாம்கள் நடத்தி பெறப்படும் அறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews