தமிழகத்தில் காலை 6:00 - 7:00; இரவு 7:00 - 8:00 மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 03, 2018

தமிழகத்தில் காலை 6:00 - 7:00; இரவு 7:00 - 8:00 மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தீபாவளியன்று காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எதிர்பாராத விபத்துகள் நிகழாத வகையில், பாதுகாப்பாக பட்டாசுகளை கொளுத்தவும், மக்களுக்கு, அரசு அறிவுரை வழங்கியுள்ளது. 'தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; அது, எந்த நேரம் என்பதை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு, பட்டாசு வெடிக்க வேண்டிய நேரத்தை நிர்ணயம் செய்து உள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: தீமையை, நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நம் கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும், பட்டாசுகளை வெடித்து, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை, மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள, இரண்டு லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களின் நலனையும், நம் கலாசாரத்தையும் பாதுகாக்க, தமிழக அரசு, இவ்வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக, இணைத்து கொண்டது.
பசுமை பட்டாசு : இவ்வழக்கில், அக்., 23 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 'சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில், பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய வேண்டும்' என, நிபந்தனைகள் விதித்தது. பட்டாசுகளை வெடிப்பதால், காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளிகளில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தீபாவளியன்று, இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க, நேர நிர்ணயம் செய்தது. இரண்டு மணி நேரம் போதாது என்பதால், கூடுதலாக இரண்டு மணி நேரம் கோரிய, தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. 'தீபாவளி அன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல், பட்டாசுகளை வெடிப்பதற்கு, அனுமதி வழங்க இயலாது. இரண்டு மணி நேரம் குறித்து, தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம்' என்றும், நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில், தீபாவளியன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி வரையிலும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரையிலும், பட்டாசுகளை வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மக்களின் கடமை : தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன் ஏழு நாட்களும், தீபாவளிக்கு பின் ஏழு நாட்களும் என, மொத்தம், 14 நாட்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்பது, ஒவ்வொருவரின் கடமை; பொறுப்பு. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பான தீபாவளிக்கு என்ன வழி? * பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் உடைய, பட்டாசுகளை வெடிக்க வேண்டும் * உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி, கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதி களில் உள்ள, நல சங்கங்கள் வழியே முயற்சிக்கலாம்.
தவிர்க்க வேண்டியவை: * அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் * மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் * குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews