பள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி! ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

பள்ளி செல்லும் 80 சதவீத குழந்தைகள் காலையில் பட்டினி! ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளில், 80 சதவீதம் பேர், காலை உணவை தவிர்ப்பதாகவும், சரிவிகித உணவு முறையை பின்பற்றாத அவர்களின் பெற்றோருக்கு ஊட்டச்சத்து குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவின் பேரில், சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், பல கட்டங்களாக நடக்கின்றன.
வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வகுப்புகளில், கோவையில் இருந்து 12 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.சித்த மருத்துவம் முதல் உளவியல் நிபுணர்கள் வரை, துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, ஊட்டச்சத்து, சரிவிகித உணவு முறை, தன் சுத்தம் குறித்து, பல்வேறு தகவல்களை விளக்கி வருகின்றனர். பங்கேற்ற ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இந்த வகுப்பில், பள்ளி வளாகத்தில் துாய்மை பேணும் முறை குறித்து வலியுறுத்தப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், 50 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பறையும் அமைத்தல் வேண்டும். தமிழகத்தில் 90 சதவீத பள்ளிகளில், இக்கட்டமைப்பு வசதி இல்லை.
உடலுக்கு தினசரி தேவைப்படும் தண்ணீர் அளவில், 20 சதவீதம் கூட, பள்ளி நேரத்தில் மாணவர்கள் குடிப்பதில்லை.அடிக்கடி தண்ணீர் அருந்தினால், கழிப்பறைக்கு செல்ல வேண்டுமே, என்பதால் குடிநீர் அருந்தும் பழக்கத்தையே, மாணவர்கள் பின்பற்றுவதில்லை. உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல், சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் சமயங்களில், பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். முறையாக சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்த, பல பள்ளிகளில் வசதி இல்லாததே காரணம். இதை அமைத்து தர வேண்டியது, தலைமையாசிரியர்களின் கடமை என, வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விழிப்புணர்வுக்கு திட்டம்! காலையில் பள்ளிக்கு வருவோரில், 80 சதவீதம் பேர், உணவு சாப்பிடுவதில்லை. சரிவிகித உணவு உடலுக்கு கிடைக்காததால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவராக வளர வாய்ப்புள்ளது. இதற்காக விரைவில், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சி வகுப்பு நடத்தி, மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பெற்றோரே...கவனிங்க! நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜாஸ்மின் கிறிஸ்டல் கூறியதாவது: பள்ளியில் உள்ள குடிநீரை, அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். காலையில் சாப்பிடாத குழந்தைகள், இரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான கலோரியை, காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என, பிரித்து சாப்பிட வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு, சிவப்பு அவலை, பாலில் சேர்த்து அளித்தால், இரும்புச்சத்து அதிகரிக்கும்.பெற்றோர்களுக்கு இது குறித்து அறிவுறுத்த, கூட்டத்தில் டாக்டர்கள் வலியுறுத்தினர்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews