விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும். 'மற்று' விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது.
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.
Translation
If from the clouds no drops of rain are shed. 'Tis rare to see green herb lift up its head.
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
Transliteration
Visumpin Thuliveezhin Allaalmar Raange Pasumpul Thalaikaanpu Aridhu
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்