அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்! ஆபத்தா, ஆரோக்கியமானதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 30, 2018

அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்! ஆபத்தா, ஆரோக்கியமானதா?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து எல்.கே.ஜி எனப்படும் மழலையர் பாடத்திட்டத்தைத் தொடங்கி, கல்வி கற்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளை எல்.கே.ஜி -யில் சேர்க்க வேண்டுமானால் முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் வீட்டுக் அருகிலுள்ள சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். சென்ற தலைமுறையினர் அப்படித்தான் கல்விப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் எல்.கே.ஜி வகுப்பிற்கே பல ஆயிரம் ரூபாய் ஏன், லட்சக்கணக்கில்கூட செலவிடும் போக்கு உருவாகி இருக்கிறது. இதுபோன்ற அதிக பணம் செலவழித்து எல்.கே.ஜி.. படிப்பில் சேர்ப்பதற்கு தங்கள் குழந்தைகளின் கல்வி மீதான பெற்றோரின் அக்கறை ஒருபுறம் என்றாலும், உறவினர்கள் மற்றும் தங்கள் வீடுகளைச் சுற்றி வசிப்பவர்கள் உருவாக்கும் சமூக அழுத்தமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டாத ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்கூட, தங்கள் பிள்ளைகளின் எல்.கே.ஜி. வகுப்புக்காக நிறைய செலவிட்டுப் படிக்க வைக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலில் தமிழக அரசே எல்.கே.ஜி படிப்பை அறிமுகம் செய்து கல்வி கற்பிக்க முன்வந்திருப்பது பள்ளிக்கல்வித் துறையில் ஓர் ஆரோக்கியமான விஷயமே. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.
``எல்.கே.ஜி. படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்து, பாடங்களை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜனவரி முதல் தேதியிலிருந்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பை ஆரம்பிக்கலாம் என்று அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமை என்று நினைக்கிறேன். `மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஆகவே, ஆங்கிலவழியிலும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்.
இது தவறானது, ஆபத்தானதும்கூட. தங்கள் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புகிறார்களே அன்றி, ஆங்கிலவழிக் கல்வியிலேயே பாடம் கற்க வேண்டும் என்று அல்ல. `அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்'படி தாய்மொழி வழிக் கல்வியில்தான் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. அந்தச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கோத்தாரி கமிஷனும், முத்துக்குமார் கமிஷனும் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றன. ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்படும் என்றால் தாய்மொழிக் கல்வி அவசியம் இல்லை' என்றுதானே அர்த்தம். ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை, இப்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
`மூன்றே மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' என்று எத்தனையோ பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 10 வருடத்துக்கு மேல் பள்ளியில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவர்களில் இன்னும் பலர் அந்த மொழியில் சரியாக எழுதவோ, பேசவோ முடியாத நிலை இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய முரண். ஆசிரியர்கள் அந்தளவுக்கு மோசமாகப் பாடம் கற்பித்துக் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலத்திலேயே அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைக் குழந்தைகள் படிக்க ஆரம்பித்தால் என்னவாகும், அந்த அளவுக்குத் தரமாக எல்லாப் பாடங்களையும் கற்றுத்தரும் அளவுக்கு ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.
ஆக, சட்டபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ஆங்கில வழிக் கல்வி சாத்தியம் இல்லாதது. ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை. அதையொரு பாடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனால், அந்த மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பது, மாணவர்களின் சிந்தனைத்திறனை மழுங்கடிக்கச் செய்யும். இன்னொருபுறம், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆரம்பிப்பதற்கு முன் அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம். அதற்குப் பிறகே எல்.கே.ஜி. படிப்பில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். குறைந்தது பத்துக் குழந்தைகளுக்கு தலா ஒரு ஆயா, ஒரு ஆசிரியர் அவசியம். 24 மணிநேரமும் தண்ணிர் இருக்கக்கூடிய வகையில் கழிப்பறை வசதி, குழந்தைகள் ஒன்றரை மணி நேரம் தூங்குவதற்கான சூழல் என எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களுக்கு என்று சில பிரத்யேகச் சூழல் தேவை.
ஏற்கெனவே இருக்கும் அங்கன்வாடிகளை மழலையர் கல்விக்கூடம் என்று மாற்றிவிடக் கூடாது. அவை எப்போதும்போல் அதற்கான நோக்கத்துடன் மட்டும் தனியாக இயங்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் தாய்மொழிக் கல்வித்திட்டத்தையும், குழந்தைகள் எல்.கே.ஜி. பயில்வதற்கான சரியான சூழலையும் உத்தரவாதம் செய்து பின்னரே அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வியை அரசு தொடங்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உருவாவதற்கான அடிப்படையாக அமையும்" என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews