பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, எம்.பி.ஏ. உள்ளிட்ட தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் எஸ்.என்.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் தொலைநிலைக் கல்வி முறைகளை வரைமுறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை யுஜிசி அண்மையில் கொண்டு வந்தது. நாக் (தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று) மதிப்பெண் 3.46 புள்ளிகள் பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், யுஜிசி-யின் புதிய கட்டுப்பாடுகளில் இடம்பெற்றுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து அங்கீகாரம் பெற முழுத் தகுதியையும் பெற்றது.
இதன் மூலம், பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய மூன்று தொலைநிலை படிப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து புதன்கிழமை முதல், இந்த மூன்று படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது