இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 07, 2018

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்று வரும் நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 550 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர் . லக்னெளவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திராகாந்தி பிரதிஷ்டானில் நடைபெற்று வரும் இந்த விழாவின் ஒரு பகுதியாக டிஎன்ஏவை தனியாகப் பிரித்து எடுக்கும் நிகழ்ச்சி ஜிடி கோயங்கா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 550 பேர் பங்கேற்று வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பின் கல்வியாளர் ரிஷிநாத், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சரோஜா காந்த் பாரிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தொடங்கிவைத்தார். அவர் கூறுகையில், இந்த நிகழ்வானது இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் ஆகும். மேலும், மாணவர்களின் அறிவியல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை இது காட்டுவதாக உள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஊக்கமளிக்கவும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் மாணவர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 12,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் என்றார். தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ் காந்த் பாரிக் கூறுகையில், சியாட் நகரில் நடைபெற்ற டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் கின்னஸ் நிகழ்வில் சுமார் 302 மாணவர்கள் பங்கேற்றனர். தற்போது நடைபெற்ற நிகழ்வில் 550 மாணவர்கள் பங்கேற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர் என்றார். திட்ட மாதிரிகள் கண்காட்சி: லக்னெள அன்சல் பிளாசா பகுதியில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளி வளாகத்தில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொறியியல் மாதிரி போட்டி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது நவீன கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தில்லி என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது 100 நவீன படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்பீன், பிரதீப் ஆகியோர் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய இரண்டு சக்கரங்களில் செயல்படும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். கோயம்புத்தூர் கே. பி.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரத்தை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஈ.சந்திரகுமார், எஸ்.ஹரிபிரசாத் ஆகியோர் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய நவீன ஊன்றுகோலை வடிவமைத்திருந்தனர். இது குறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், பார்வையற்றவர்கள், செல்லிடப்பேசியின் வாயிலாக இணைக்கப்பட்ட கருவிகள் மூலம் தங்களது முன்னே உள்ள பொருள்களை உணரும் வசதி இந்தக் கருவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews