இலவச பஸ் பாஸ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவசநலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றான, இலவச பஸ் பாஸ் திட்டத்தில், மாநிலம் முழுவதும், 20 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியதும், புதிதாக சேர்ந்தோர் உள்ளிட்ட, அனைத்து மாணவர்களுக்கும், பஸ் பாஸ் வழங்கப்படும்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களும், மாவட்ட அரசு பஸ் கோட்ட அலுவலகங்களும் இணைந்து, பஸ் பாஸ் வழங்கும் பணியை மேற்கொள்ளும்.இந்த ஆண்டு, பள்ளிகள் திறந்து, நான்கு மாதங்களாகும் நிலையில், இன்னும் பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.
'புதிய பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்; பள்ளி சீருடை அணிந்திருந்தாலே, பயண சீட்டு வாங்க வலியுறுத்தக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலானநடத்துனர்கள், இதை பின்பற்றுவதில்லை. கிராம பகுதிகள் நிறைந்த மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், இந்த பிரச்னையால், பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது சவாலாக உள்ளது; அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, இலவச திட்டங்களை தாமதமின்றி வழங்கினால், அரசு பள்ளிகளில், அவர்களை தக்க வைத்து கொள்ள உதவியாக இருக்கும்.பஸ் பாஸ் வழங்குவதில், மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுவதால், பல மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்ல முற்படுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.