டிவி நிகழ்ச்சியினால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 23, 2018

Comments:0

டிவி நிகழ்ச்சியினால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!


தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியைப் பார்த்து வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்தபோது பள்ளி மாணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஊரப்பாக்கத்தை அடுத்த ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் வில்சன். இவர், தனியார் ஹோட்டலொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செம்மஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகனான ஜெபின், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், இன்று (செப்டம்பர் 22) வீட்டில் தனியாக இருந்தார் ஜெபின். அப்போது, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சாகச நிகழ்ச்சியை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தூண்டுதலுக்கு ஆளான ஜெபின், வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ஜெபின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் ஈசன் இளங்கோ அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், “ஊடகங்களில் முன்பெல்லாம் இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்போது, இந்த நிகழ்ச்சிகளைச் செய்து பார்க்க வேண்டாம் என்று சமூக அக்கறையுடன் டைட்டில் போடுவார்கள். அது மட்டுமல்லாமல், ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். “இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள்; ரொம்ப ஆபத்தானது; வீட்டில் இருக்கிறவர்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்” என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே சொல்வார்கள். அல்லது அந்த நிகழ்ச்சியின் அடியில் எழுத்தில் அந்த தகவல் இருக்கும். தற்போது இதுமாதிரி எதுவும் போடுவதில்லை” என்று தெரிவித்தார். தற்போது, ஊடகங்கள் பொறுப்பற்ற தன்மையோடு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். “இது மாதிரியான சாகசங்கள் செய்தே ஆக வேண்டும் என்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. இதில் என்ன அவசியம் உள்ளது. இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யக்கூடாது. இது மாதிரி செய்கிறவர்களை ஊடகங்களும் அங்கீகரிக்கக்கூடாது” என்றார் ஈசன் இளங்கோ.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews