அரசுப் பள்ளிகளுக்கு ஓர் 'அபாய மணி'! சிறந்த மாணவர்களை விலைக்கு வாங்கும் தனியார் பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 06, 2018

Comments:0

அரசுப் பள்ளிகளுக்கு ஓர் 'அபாய மணி'! சிறந்த மாணவர்களை விலைக்கு வாங்கும் தனியார் பள்ளிகள்



போதிய மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடப் போவதாக ஒருபுறம் கல்வித்துறை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பொதுத் தேர்வில் தேர்ச்சியே பெறாத அரசுப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மற்றொரு புறம் கல்வித்துறை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொதுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளிகள் அந்தச் சிறந்த மாணவர்களைத் ‘தத்து’ எடுப்பதாகச் சொல்லி விலைக்கு வாங்குகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இருக்கிறது சாட்டியக்குடி. இங்கு ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகுதியாக வாழும் கிராமம் இது. இவ்வூரில் பெரியார் நினைவு சமத்துவபுரமும் உள்ளது.

சாட்டியக்குடி உயர்நிலைப்பள்ளியில் 254 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் கடந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 51 மாணவ – மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 51 பேரும் வெற்றி பெற்றனர். இப்படி இந்தப் பள்ளி கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் கடுமையாக உழைக்கின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பினால், மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வெற்றியை ஈட்டித் தருகின்றனர். இப்பள்ளியின் மாணவி அலமேலுமங்கை என்பவர் 500 க்கு 480 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும், அலமேலு, நாகை மாவட்டத்திலேயே கணிதப் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்ற ஒரே மணவி என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அருகேயுள்ள அந்தியூரில் உள்ள ஐடியல் ஆதாஸ் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி, அலமேலுவைத் ‘தத்து’ எடுப்பதாக விலைபேசி, 11, 12 ஆம் வகுப்பில் தங்கள் பள்ளியில் (விடுதி வசதி உட்பட), ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவு செய்வதாக ஆசை காட்டி அந்த மாணவியைத் ‘தத்து’ எடுத்துள்ளது.

அடுத்து, இப்பள்ளியில் தனுஷ் என்னும் மாணவர் 462 மதிப்பெண் பெற்று இப்பள்ளியளவில் 2-ஆம் இடத்தையும், வினோதினி என்னும் மாணவி, 459 மதிப்பெண் பெற்று 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். 2-ஆம் இடத்தைப் பெற்ற தனுஷ் மாணவரைப் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி, அனைத்துச் செலவுகளும் செய்து, தங்கள் பள்ளியில் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்க வைப்பதாகத் ‘தத்து’ எடுத்துள்ளது

ஏழை – எளிய மக்களின் பிள்ளைகள் இப்படி ஆசிரியர்களின் கடின உழைப்பாலும் தங்களது சொந்த முயற்சியாலும் படித்துச் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றால், இந்தச் சிறந்த மாணவர்களைத் தனியார் பள்ளிகள் ‘தத்து’ என்னும் பெயரில் மாணவர்களை விலைக்கு வாங்கிச் செல்வது என்ன நியாயம்? இதன் பின்னணியில் யார் யார் ஏமாற்றப் படுகிறார்கள்? அல்லது யார்யாருக்கு இதன் மூலம் என்ன ‘பலன்’ கிடைக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

இத்தனைக்கும் சாட்டியக்குடிக்கு அருகிலேயே தேவூர், கீழ்வேளூர் ஆகிய ஊர்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இப்படி, தனியார் பள்ளிகள் ‘தத்து’ எடுக்கும் இந்நிலை பெருகுமானால், அரசு மேல்நிலைப் பள்ளிகள் எப்படி வளரும்? எப்படிச் சிறந்த தேர்ச்சியினை அரசுப் பள்ளிகள் பெறும்? எனவே, கார்ப்பரேட் கம்பெனிகள் விலைக்கு வாங்குவது போல், அரசுப் பள்ளியில் படித்து வெற்றி பெறும் சிறந்த மாணவர்களைத் தனியார் பள்ளிகள் விலைக்கு வாங்குவது என்பது, அரசுப் பள்ளிகளுக்கும் கல்வித் துறைக்கும் ஓர் ‘அபாய மணி’ ஆகும்.

அரசுப் பள்ளிகளுக்கு ஓர் ‘அபாயமணி’! சிறந்த மாணவர்களை விலைக்கு வாங்கும் தனியார் பள்ளிகள்...!


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews