முசிறி அடுத்த வெள்ளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியையை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை 143 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒரு தலைமையாசிரியரும், 4 இடைநிலை ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் வித்யா சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்துவதில்லை என்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கு பலமுறை இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் புகார்மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று பள்ளிக்கு வழக்கம்போல் மாணவ, மாணவிகள் வந்தனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து பள்ளியை இழுத்து பூட்டினர். பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பம் இல்லை, புகாருக்குள்ளான ஆசிரியையை இடம் மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை கல்வித்துறை அலுவலர்களின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு போட்டிருந்த பூட்டை திறந்து குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். அடுத்த ஆண்டு இப்பள்ளி நூற்றாண்டு விழா காணவுள்ள நிலையில் ஆசிரியை மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து பள்ளியை இழுத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.