திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2018, ஏப்ரல் பருவத்துக்குரிய தேர்வுகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடித் தேர்வு நடைபெறஉள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் க. துரையரசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2018, ஏப்ரல் பருவத்துக்குரிய இளநிலை, முதுநிலைப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை முதுநிலைக் கணிதப் பாடத்துக்கு முடிவுகள் வெளியான நிலையில், புதன்கிழமை இளநிலை அறிவியல் பிரிவில் அனைத்துப் பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலைப் பாடப்பிரிவில் 2015-18 ஆம் கல்வியாண்டில் பயின்று முடித்து, ஏதேனும் ஒரு தாளில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலை 7 -ல் நடைபெறும் அனைத்து இளநிலைப் பாடங்களுக்குரிய உடனடித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரிகளின் வாயிலாக விண்ணப்பித்து இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான கட்டணமான ரூ.750-ஐ பல்கலைக்கழக இணையதளம் வழியாகவோ அல்லது bharathidasan university, tiruchirappalli என்ற பெயரில் வங்கி வரைவோலையாகவோ செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு, ஒளிநகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 15 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்துப் பாடங்களுக்கும் எண்ணிக்கை வரையறையின்றி மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். அதுபோலவே, ஒளிநகல் மற்றும் மறுகூட்டல் தேவைப்படின் எண்ணிக்கை வரையறையின்றி அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.