தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கானகலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த இடங்கள்: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதே போன்று தமிழகத்தில் சென்னை பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்குச் சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 1-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.70,000 விண்ணப்பங்கள்: நேரடி விநியோகத்துக்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 45,000 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க 25,000 விண்ணப்பங்களும் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் அச்சடித்து மீண்டும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.