ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 21, 2018

Comments:0

ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்



தமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள். மேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள்.
கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. பொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும். தலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும். தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி, புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள். தொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கோ. ஜெயக்குமார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews