இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டதால், துாத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 23ல், வெளியாகின. இந்த தேர்வில், மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், தங்கள் விடைத்தாளை மறுகூட்டல் செய்ய, மே, 24 முதல், 26 வரை ஆன்லைனில் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், துாத்துக்குடியில் நிகழ்ந்த, 'ஸ்டெர்லைட்' போராட்ட கலவரத்தால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இணையதள சேவை துண்டிக்கப் பட்டது.
இதனால், இந்த மூன்று மாவட்டங்களில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர். நேற்று முன்தினம், துாத்துக்குடி மாவட்டம் உட்பட, அனைத்து மாவட்டங்களுக்கும், மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூன்று மாவட்ட மாணவர்களுக்கு மட்டும், மறுகூட்டலுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இன்று முதல், 31ம் தேதி, மாலை, 5:45 மணி வரை, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கும் சென்று, விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.