திருச்சி: சிறப்பு டெட் தேர்வில் கற்பித்தல் அனுபவத்திற்கு முக்கியத்துவம் இல்லை - 2 ஆண்டுக்கு 2 மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்கி தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் முதல்வருக்கு வலியுறுத்தல்.
சிறப்பு டெட் தேர்வில் வெயிட்டேஜ் மார்க் - முதல்வருக்கு ஆசிரியர்கள் வலியுறுத்தல்

திருச்சி, அக். 18- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறப்பு டெட் தேர்வில் கற்பித்தல் திறன் புறக்கணிப்பு
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல், அவர்களின் நினைவாற்றலை மட்டுமே சோதிக்கும் தேர்வாக உள்ளது.
ஆசிரியர்களின் கற்பித்தல் அனுபவத்திற்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியருக்கு, அவரது கற்பித்தல் அனுபவத்தில் எப்படி ஒரு வெற்றிகரமான மாணவரை உருவாக்குவது, பிரச்சனைக்குரிய மாணவனை எப்படி நல்வழிப்படுத்துவது, திறன் உள்ள மாணவர்களை எப்படி முன்னேற வைப்பது போன்ற விஷயங்களில் அவர் திறமை உள்ளவராக இருந்தாலே போதும். அதுதான் அவரது முக்கியமான தகுதி.
✅ ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை - வெயிட்டேஜ் மார்க்
எனவே, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-ல் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் பேரில் 2 ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என்ற அளவில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
பணி நாடும் தேர்வு அல்லது போட்டி தேர்வுகளுக்கு வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது சமூக நீதியாகும்.
சமூக நீதி பாதிப்பு - இட ஒதுக்கீடு முறை
பணி புரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் சார்ந்த வகுப்பின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிப்பது சரி கிடையாது. மேலும் பதவி உயர்வுக்கு பணியாற்றிய காலத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பதவி உயர்வுக்கு கல்வித்துறையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றப்படுவதில்லை.
அப்படி இருக்கையில் தேர்ச்சி மதிப்பெண்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவது சமூக நீதியாக அமையாது.
பள்ளிகளில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 35 மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயித்துள்ளோம். அதே போல் அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்
தமிழக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமாக்க கூடாது என்று சிறப்பு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.
இப்பிரச்சனையில் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் மாநில அரசால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை பரிசீலிக்க வேண்டும். கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் ஒரு லட்சம் ஆசிரியர்களை மன உளைச்சலிலேயே வைத்திருப்பது அரசுக்கு அழகல்ல.
எனவே, முதல்வர் இந்த பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.