*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில அமைப்பு*
*நாள்:18.10.2026*
******************
*ஊடகச் செய்தி*
*******************
*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 08/2026 நாள்: 18.10.2026*
******************
*தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு தொடர் பாதிப்பு* *நவம்பரில் போராட்டம் நடத்த* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!*
*******************
*தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (18.10.2026) மதுரையில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர்களான ச.டேவிட் ராஜன், கு.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் தா.கணேசன் வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார். துணைப் பொதுச்செயலாளர் தே.முருகன் நன்றி கூறினார்.*
*கூட்டத்தில் சங்கத்தின் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்தும், கூட்டப் பொருள்களின் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்தும் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் உரையாற்றினார். கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது.*
*தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தமிழக அரசு தீர்வுகாண முன் வர வேண்டும். "ஆசிரியர்களின் கோரிக்கைகள் எனது அறை முழுவதும் நிரம்பி வழிகிறது. அவற்றுக்குத் தீர்வுகாண குழு ஒன்று அமைக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார். குழு அமைப்பது என்பது பிரச்சனைகளைக் கிடப்பில் போடும் செயல். கடந்த கால அனுபவங்கள் இதை உணர்த்துகின்றன.*
*தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகாண வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளது. கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடாந்திர ஊதிய உயர்வு கூட பெற முடியாமல் பெரும் துயரத்தில் உள்ளனர். ஊதிய அட்டவணையில் வரிசை எண்: 45ஐ எட்டிய இடைநிலை ஆசிரியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வு பெறும் வகையில் ஊதிய அட்டவணையில் நிலை 12-ல் வரிசை எண் 50 வரை நீட்டித்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும்.*
*ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலைக்குப் பெற்ற தவறான தணிக்கைத் தடைகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பாணையை நடைமுறைப்படுத்தாமல் அதன் மீது மேல்முறையீடு செய்திட பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்திருப்பது 2000க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியப் பணப்பலன்களைப் பெற இயலாத மோசமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் முடிவைக் கைவிட்டு இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.*
*10.03.2020க்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் தொடர்பாகவும், எம்.காம்; பி.எட் மற்றும் எம்.ஏ (பொருளாதாரம்) ஆகிய உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்காமல் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். அதுவரை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்காலப் பணப்பலன்களை வழங்கிட வேண்டும். மேலும் 1.1.2026க்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு TAPS திட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு உரிமை ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.*
*ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் TET தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பதோடு ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு வெயிடேஜ் மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும். மேலும், 2026 நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு TET தேர்வை நடத்தி அதன் முடிவுகளை 2026 டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடும் வகையில் தேர்வு அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும்.*
*தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் காலை உணவுத்திட்டப் பணிகளில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்தி, கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையில் அதற்கு பொறுப்பு ஆசிரியர்கள் நியமிப்பதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்.*
*ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற அனைவரையும் பணிவிடுவிப்புச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாநில தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு தணிக்கைக்கு வரும் அலுவலர்கள் கையூட்டுத் தராதவர்களுக்கு தவறான தணிக்கைத் தடைகள் விதிப்பதும், அத்தணிக்கைத் தடைகளை மாநில தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு ரத்து செய்து ஆணை வெளியிடுவதும், கையூட்டுத் தராதவர்களுக்கு ரத்து செய்ய மறுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*
*தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையில் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.*
*மேலும், தமிழகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அலைக்கழிக்கும் போக்கை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செய்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் 2026 நவம்பர் மாதத்தில் தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.*
*மாநில செயற்குழுவில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*
****************** *இப்படிக்கு*
*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.