பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பில் 93.70% மாணவ, மாணவிகள் தேர்ச்சி Public Examination Results Released: 93.70% of Students Pass CBSE Class 10 Exams
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கையின்படி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு மட்டும் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெறும். முதல் தேர்வை வழக்கமான முறையில் அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். 2-ம் கட்டத் தேர்வை விரும்பியவர்கள் எழுதலாம். மதிப்பெண் அதிகரிக்க விரும்புகிறவர்கள், முதல் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முடியாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, நடப்பு ஆண்டு 10-ம் வகுப்புக்கான முதல்கட்ட பொதுத் தேர்வு பிப்.17 முதல் மார்ச் 11-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 24.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. தேர்வு எழுதியதில் 23.16 லட்சம் (93.70%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2025-ம் ஆண்டைவிட 0.04 சதவீதம் அதிகம். மாணவர்கள் 92.69 சதவீதமும், மாணவிகள் 94.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமபோல், தேர்ச்சியில் மாணவிகள் 2.3 சதவீதம் அதிகமாகும்.
மண்டல வாரியான தேர்ச்சியில் 99.79 சதவீதம் பெற்று திருவனந்தபுரம், விஜயவாடா முன்னிலையில் உள்ளன. சென்னை 99.58 சதவீதம் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது. 55,368 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.gov.in மற்றும் https://results.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிலாக்கர் வழியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அடுத்தகட்ட தேர்வு மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.cbse.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.