கலாசார மற்றும் மொழியியல் பரிமாற்றங்களை ஆழப்படுத்தும் முயற்சியாக, அரசு பள்ளி, கல்லுாரிகளில் முழு நேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த, உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, நான்காவது முறையாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், வல்லுனர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கதை, கவிதை, மற்றும் கட்டுரை வாசிப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கிய பள்ளி மற்றும் கல்லுாரிகளில், மாலை நேரங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டன. இதற்காக, ஹிந்தி தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து உத்தர பிரதேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்தாண்டு இறுதியில், நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'உத்தர பிரதேச குவீன்ஸ் அரசு கல்லுாரி மாணவி பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக் கொண்டார்' என, பாராட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளிகள், கல்லுாரிகளில் முழு நேர தமிழ் வகுப்புகள் நடத்த உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து குவீன்ஸ் அரசு கல்லுாரி முதல்வர் சுமித் குமார் கூறியுள்ளதாவது:
கலாசாரம் மற்றும் மொழியியல் பரிமாற்றங்களை ஆழப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, தமிழ் மொழியை வளர்க்க உ.பி., அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தை ஒட்டி, எங்கள் கல்லுாரியில் மாலையில் தமிழ் மொழி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ் கற்ற சில மாணவர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழ் மொழியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பினர்.
இந்த சூழலில், வரும் கல்வி யாண்டு முதல், குவீன்ஸ் அரசு கல்லுாரியில் முழு நேர தமிழ் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவி பாயல் படேலுக்கு தமிழ் கற்பித்த, தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா குமார் சாய் என்பவருடன் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அவர், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். பனாரஸ் ஹிந்து பல்கலை தமிழ் துறை தலைவரும், இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
மொழி பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, வாரணாசியைச் சேர்ந்த ஐம்பது ஆசிரியர்கள் ஹிந்தி கற்பிப்பதற்காக தமிழகத்துக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குவீன்ஸ் அரசு கல்லுாரியை தொடர்ந்து, ஹரீஷ் சந்திரா பெண்கள் இடைநிலைக் கல்லுாரியும், தமிழ் மொழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கல்லுாரி முதல்வர் பிரியங்கா திவாரி கூறுகையில், 'காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தமிழ் மொழி வகுப்புகள், எங்கள் மாணவர்களுக்கு பயனாக இருந்தன. 'இதன் தொடர்ச்சியாக, அடுத்த கல்வியாண்டில் முழுநேர தமிழ் மொழி வகுப்புகள் நடத்த முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன,' என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், முழு நேர தமிழ் மொழி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ள உ.பி., அரசு, அது தொடர்பான கருத்துகளை தெரிவிக்குமாறு கல்வி நிறுவன நிர்வாகங்களை கேட்டுக்கொண்டு உள்ளது
Monday, January 12, 2026
அரசு பள்ளிகளில் முழுநேர தமிழ் வகுப்பு: அறிமுகப்படுத்துகிறது உத்தர பிரதேச அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.