போலீஸார் விசாரணை - பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 02, 2025

Comments:0

போலீஸார் விசாரணை - பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்?



போலீஸார் விசாரணை - பயந்து தூக்க மாத்திரை சாப்பிட்ட ஆசிரியர்?

சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 23.4.2025-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சிறுமி புறப்பட்டார். அப்போது சிறுமி படிக்கும் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக சிறுமி புகார் அளித்துள்ளார்.

அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வகுப்பறையிலிருந்து வெளியில் ஓடிவந்தார். பின்னர் தனக்கு நடந்த கொடுமைகளை அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை ஒருவரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பெண் ஆசிரியைச் சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று விவரத்தைக் கூறினார்.

உடனே சிறுமியிடம் தலைமை ஆசிரியர் என்ன நடந்தது என்று விசாரித்தார். சிறுமி அளித்த தகவலின்படி அவருக்குத் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மோகன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் மோகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மோகன் தன் தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். இந்தநிலையில் சிறுமியின் அம்மா, கடந்த 29.4.2025-ல் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார், சிறுமி படிக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அறிவியல் ஆசிரியர் மோகன், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

அப்போது அவர் விசாரணைக்குப் பயந்து தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆசிரியர் மோகனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த முடியவில்லை.

சிகிச்சைக்குப் பிறகு விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews