பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 20, 2022

Comments:0

பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!



பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எது தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பெயரை, அண்ணாதுளை என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகியுள்ளது.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்றது. இதில் முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில், தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஜாதி தொடர்பான கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)

மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி தொடர்பான வினாத்தாள் இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை சார்பில் உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி தொடர்பான கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் பி.ஏ. அரசியல் பொருளாதார பாடத்திற்கான தேர்வில், தமிழ்நாட்டில் அண்ணாதுளை ஆட்சியின் சாதனைகள் பற்றி விவாதிக்க என்று பிழையுடன் வினாத்தாள் வெளியாகி உள்ளது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதேபோல பி.ஏ. வரலாறு பாடத்தில் கொள்குறி வினா பதில்களில், பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுக்கான பதில் அ.1822, ஆ.1824, இ.1823, ஈ.1825 என்று தவறான விடைகளே இடம்பெற்றுள்ளது. இதற்கு சரியான பதில் 1828 ஆகஸ்ட் 20 என்பதாகும். மேலும் பி.ஏ. ஆங்கில பாடத்தில் விளக்கக்காட்சியின் போது நம்பகத்தன்மையை எப்படி உருவாக்கும் என்ற கேள்விக்கு, தவறுதலான பதில் இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான பாட வினாத்தாளில் தவறான பதில்கள், பிழைகள் வெளியாகி உள்ள நிலையில் வினாத்தாள் ஆய்வுக்குழுவின் தரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்

மேலும் பி.ஏ. வரலாறு பாடத்தில், சுதந்திர போராட்ட வீரரும், காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே எந்த தலைவராக இருந்தார் என்ற கேள்விக்கு, தீவிரவாதிகள், மிதவாதிகள், பயங்கரவாதிகள், புரட்சிவாதிகள் என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக்கு அளித்துள்ள கொள்குறி வகை விடைகள் சுதந்திர போராட்டத் தலைவரை தரம் தாழ்த்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக, பல்கலைக்கழக தரப்பில் கூறியது: பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட வல்லுநர்கள் குழு பட்டியலில் உள்ள பிற பல்கலைக்கழகங்கள், இணைவுபெற்ற கல்லூரியில் பணியாற்றிவரும் ஆசிரியர்களை அனுபவத்தின் அடிப்படையில் குழுத் தலைவராகவும், குறைந்தபட்சம் 3 ஆண்டு கற்பித்தல் அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுகின்றன.

அதேபோல வினாத்தாள் ஆய்வுக்குழுவில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் குழு அமைக்கப்படுகிறது. இதில் குழு தலைவர், 2 தேர்வாளர்கள் நியமிக்கப்படுவர். இந்தக் குழு மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்து வழங்கும். வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பும் முன்பாக பாடத்திட்டத்திற்கு அப்பால் வினா கேட்கப்பட்டுள்ளதா, தவறு மற்றும் எழுத்துப் பிழை ஆகியவை உள்ளதா என வினாத்தாள் ஆய்வுக்குழு தான் சரிபார்க்கப்படும். பின்னர் மூன்று வகை வினாத்தாளில் ஒரு வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பி அச்சாகி வெளியே வரும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் மட்டும் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது கரோனா தொற்றுப்பரவல் குறைந்து கல்லூரி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பருவத் தேர்வுகள் நடக்கும் நிலையில் வினாத்தாள்களில் ஏராளமான பிழைகளும், தவறுகளும், சர்ச்சைக்குரிய வகையில் வினாக்களும் இடம்பெற்று வருவது பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றனர்.


இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் தயாரிப்பு என்பது துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் மூலம் நேரடியாக நடைபெறுகிறது. அதேபோல பல்கலைக்கழகத்தின் வினாத்தாள் தயாரிப்பு என்பது ஆய்வு மாணவர்களை வைத்து எடுப்பதை பேராசிரியர்கள் கைவிட வேண்டும். மேலும் வினாத்தாள் தயாரிக்கும் பேராசிரியர்களை பல்கலைக்கழக தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து வினாத்தாள் தயாரிக்கும்போது தவறு, பிழை உள்ளிட்டவை நேர வாய்ப்பு இருக்காது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews