BEO தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம் - TRB மீது தேர்வர்கள் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 14, 2021

Comments:0

BEO தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தாமதம் - TRB மீது தேர்வர்கள் அதிருப்தி

வட்டாரக் கல்வி அதிகாரி தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு 11 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் ஆசிரியர் தேர்வுவாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடக்கக்கல்வித் துறை சார்நிலைப்பணியின் கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் (பிஇஓ) பணியிடங்கள் 25 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 75 சதவீதம்நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் வட்டாரக் கல்வி அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறலாம்.

பதவி உயர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில், அவர்கள்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். நேரடி நியமனத்தைப் பொருத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் நடைபெறுகிறது. இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றவர்கள் டிஆர்பி நடத்தும் பிஇஓ போட்டித்தேர்வு எழுதலாம்.
அந்த வகையில், 2018-2019-ம்ஆண்டுக்குரிய 97 பிஇஓ நேரடி நியமன காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம்,கடந்த 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிப்.14, 15, 16 ஆகிய 3 நாட்கள் இணையவழி வாயிலாக போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டன. அத்தேர்வுகளை தமிழகம் முழுவதும் 42 ஆயிரத்து 682 பிஎட் பட்டதாரிகள் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் 20.2.2020 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களும் பதிவெண்கள் வாரியாக டிஆர்பி இணையதளத்தில் கடந்த ஜன.27-ம் தேதி வெளியிடப்பட்டது. மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதால் உடனடியாகத் தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பலமாதங்கள் உருண்டோடியும் இன்னும் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ''இணையவழியில் தேர்வுகள் நடத்துவதற்கு அடிப்படை காரணமே தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால், தேர்வு நடத்தி20 மாதங்கள் கடந்துவிட்டன. மதிப்பெண் பட்டியலை வெளியிட்டே 11 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னும் தேர்வுப் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம்தாழ்த்தி வருகிறது. தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன்பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியில் சேருவதற்குள் அடுத்த கல்வி ஆண்டு வந்துவிடும். இன்னும் 2019-2020, 2020-2021, 2021-2022 ஆகிய 3கல்வி ஆண்டுகளுக்கான பிஇஓகாலியிடங்களை நிரப்ப வேண்டும்.2018-2019-ம் கல்வி ஆண்டுக்கானகாலியிடங்களே இன்னும் நிரப்பப்படாதபோது, அடுத்தடுத்த கல்விஆண்டுகளுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, எப்போது பணியமர்த்தப் போகிறார்களோ'' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இணையவழியில் தேர்வுநடத்துவதற்கு அடிப்படை காரணமே தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால், தேர்வு நடத்தி20 மாதங்கள் ஆகிவிட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews