மருத்துவ மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாத புதிய பாடத் திட்டத்தை எப்படி ஏற்க முடியும்?...ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 06, 2021

Comments:0

மருத்துவ மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாத புதிய பாடத் திட்டத்தை எப்படி ஏற்க முடியும்?...ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் பாடத்திட்டத்தில் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக 41 முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தனர். இதற்கு ஒன்றிய அரசு, தேசிய தேர்வுகள் முகமை மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஒன்றிய அரசு நேற்று முன்தினம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டதை திரும்பப் பெற முடியாது.

இருப்பினும், இந்த புதிய பாடத் திட்டத்திற்கு மாணவர்கள் தயாராவதற்காக, இந்தாண்டு நவம்பரில் நடக்க இருந்த தேர்வு, 2022ம் ஆண்டு ஜனவரி 10, 11 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘கடைசி நேரத்தில் 60 சதவீதபாடத் திட்டம் மற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்குதான் பாதிப்பு அதிகம். இந்த பாடத் திட்டம் மாற்றத்தை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது,’ என வாதிட்டனர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தார், ‘பாடத் திட்டத்தில் 40 சதவீதம் தான் மாற்றப்பட்டுள்ளது. அதுவும், மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில்தான் மாற்றப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். நீதிபதி சந்திரசூட் குறுக்கிட்டு, ‘‘5 ஆயிரம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ள இந்த விவகாரத்தில் அரசு, தனியார் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகள் எத்தனை? என கேட்டார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர், “மொத்தம் 414 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில், 114 அரசு கல்லூரிகள். மேலும், 12,000 மருத்துவர்கள் இந்த தேர்வுக்காக பதிவு செய்துள்ளனர்,’’ என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘கடந்த 2018ம் ஆண்டு முதல் இருக்கும் இந்த பாடத்திட்டத்தை இவ்வளவு அவசரமாக ஏன் மாற்றம் செய்ய வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? அடுத்தாண்டு இதை செய்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. 2020ல் இருந்த பாடத்திட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ள பாட திட்டத்துக்கும் உள்ள என்ன வித்தியாசம் உள்ளது என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதில், மருத்துவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது? அதற்கான காரணம் என்ன? இதில், 40 சதவீத பாடத்திட்டம் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறுகிறீர்கள், அது மாணவர்களை பாதிப்படைய செய்யும் என அரசுக்கு தெரியாதா? அல்லது நிபுணர் குழு அதனை தெரிவிக்கவில்லையா?. உங்களிடத்தில் அதிகாரம் இருப்பதால் தானே இப்படி செய்துள்ளீர்கள்.

இதனை எப்படி ஏற்க முடியும்? பாடத் திட்டத்தை உங்கள் இஷ்டத்திற்கு மாற்றி விட்டு, மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் ஜனவரி மாதத்திற்கு தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். மருத்துவப் படிப்பு என்பது விலை உயர்ந்தது என அனைவரின் மத்தியிலும் ஏற்கனவே பரவலாக பேசப்படும் ஒன்றாக இருக்கும் வேலையில் இதுபோன்ற செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது,’ என ஒன்றிய அரசை கண்டித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews