மீண்டும் வேண்டும் 58! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 01, 2021

Comments:0

மீண்டும் வேண்டும் 58!

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் 2008 இல் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைக் காட்டிலும் வரலாறு காணாத வேறுபல சிக்கல்கள் நிலவி வருவது அறிந்ததே. கொரோனா கொடிய நோய்த்தொற்று என்பதால் உலக மக்கள் அனைவரும் பல வகையான நெருக்கடிகளுக்கு ஆட்பட்டுள்ளனர். பொருளாதாரம் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் போதிய முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடுகள் மற்றும் தொலைநோக்கு பார்வையின்றித் தொற்றைக் காரணம் காட்டி திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் பல கோடி மக்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டது. அவர்களது கேள்விக்குறியான துயரம் மிகுந்த முடங்கிக் கிடக்கும் வாழ்க்கையில் மற்றொரு புதிய நெருக்கடியாக வேலையின்மை அதிகரிக்கத் தொடங்கியது. ஊதிய பிடித்தமும் விலைவாசியை அடியொற்றி வழங்கப்படும் பஞ்சப்படி உள்ளிட்ட ஊதியப் பணப்பலன்கள் நிறுத்தமும் மத்திய மாநில அரசுகள் தத்தம் ஊழியர்களுக்கு வலிந்து செயல்படுத்தின. இவற்றுடன் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பல்வேறு பெரு நிறுவனங்கள் கூடுதலாகச் செயல்படுத்தியது வேதனை. கோவிட் 19 காலத்திற்கு முன் 8 விழுக்காட்டிற்கும் மிகுதியாக இருந்த வேலையின்மை விகிதம், 25 % அதிகமாகி நாடு முழுவதும் கடந்த ஏப்ரலில் 12.2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளதாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் வேலையின்மை விகிதம் 50% ஆகும். வேலையிழந்தவர்களுள் பெரும்பாலோனோர் இளைஞர்களே ஆவர். அவர்களுள் நாடு முழுவதும் 20 - 30 வயதினர் சுமார் 2.7 கோடி பேரும், 31 - 40 வயதினர் 3.3 கோடி பேரும் வேலையைப் பறிகொடுத்துள்ளனர். இந்த அவல நிலையானது படித்த வேலையில்லாத இளைஞர்களின் மனத்தில் பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் தோற்றுவித்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிநிறைவு பெரும் ஓய்வு வயது 58 ஆகும். கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் இந்திய ஒன்றிய அரசு அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்குவதைப் போல் 60 என்றிருந்தது. இந்த பணிநிறைவுக்கான வயது வரம்பானது கொரோனா காலத்தில், முதலில் 59 ஆகவும் அதன் பின்னர் 60 ஆகவும் தன்னிச்சையாக அதிகரித்து அறிவிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் வயது முதிர்வின் காரணமாகப் பணி நிறைவு பெறுவோரின் ஓய்வூதிய பணப்பலன்களை மேலும் ஈராண்டுகளுக்கு வழங்குவதில் இருந்து தள்ளி வைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும். பொதுவாக பணி நிறைவு பெற இருப்போர் பலரும் தமக்குக் கிடைக்கும் ஓய்வூதிய பணப்பலன்களைக் கொண்டு பல்வேறு நியாயமான ஏக்கக் கனவுகளுடன் நனவாகிடும் பொழுதைக் காண விழைவர். குறிப்பாக பிள்ளைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமண ஏற்பாடுகள், சொந்த கனவு வீடு, அமைதியாகக் கழியும் நிம்மதியான வாழ்க்கை முதலானவற்றை பணி நிறைவு பெறும் கடைசிக் காலத்தில்தான் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அமைகிறது. அந்த ஆசையிலும் அரசு மண்ணள்ளிப் போடுவது சரியாகாது. ஓய்வு வயது நீட்டிப்பு என்பது நல்ல தீர்வு ஆகாது. திட்டமிட்ட கால அலைக்கழிப்பு வீண் மன நெருக்கடிக்கே நடுத்தர வர்க்கத்தை இட்டுச் செல்லும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, இத்தகைய பணிக்கால அதிகரிப்பால் ஓய்வூதிய பலன்களை காலத்தில் கிடைக்கவிடாமல் தாமதப்படுத்தும் நோக்கும் படித்த தகுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை மேலும் நீட்டிக்கும் போக்கும் அரசால் நிகழ்த்தப்படுகிறது. இதனால் முதுமைக் காலப் பணிச்சுமையும் கைவிட்டு நழுவும் நிதியாதாரங்களும் பல்வேறு உளச்சிக்கல்களையே பணியில் தோற்றுவிக்கும். அரசுக்கும் இதனால் மாதாந்திர வழக்கத்திற்கு மாறான ஊதிய கூடுதல் நிதிச்சுமை நிகழாது என்று ஒரேயடியாக புறந்தள்ளி விட முடியாது. நடப்பில் பணி நிறைவு பெறவிருக்கும் ஊழியர் ஒருவர் பெறும் கடைசி மாத ஊதியத்தில் இன்றைய சூழலில் மூன்று முதல் ஐந்து புதிய பணி வாய்ப்புகளை உருவாக்கி வழங்க முடியும். ஒரே நேரத்தில் நிதிச் சுமையைப் பெரிதாகக் காரணம் காட்டி பணி நிறைவு பெற இருப்போர் மற்றும் வேலைவாய்ப்புக்காகத் தவமாய் தவமிருக்கும் வயது முதிர்வுறும் இளைஞர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது எந்தவொரு அரசுக்கும் நல்லதல்ல. மாநில அரசுகள் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் கையறு நிலையில் தவிக்கும் போது ஒன்றிய அரசு தேவையான, நிலுவையிலுள்ள நிதியை மனமுவந்து வழங்க முன்வர வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் காட்டப்படும் பாரபட்சத்தால் வஞ்சிக்கப்படுவோர் மேற்குறிப்பிட்ட இரு தரப்பினரேயாவர்.
காலம் கடந்து கிடைக்கும் நீதியை அநீதி என்பர். உரிய உகந்த நேரத்தில் மறுக்கப்பட்ட ஓய்வூதியக்கால நிதியும் ஒத்திவைக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்பும் அத்தகையதே ஆகும். கடந்த ஆட்சியில் தேர்தல் கால சலுகையாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான திடீர் கரிசனமாகவும் நோக்கப்பட்ட ஓய்வூதிய வயது நீட்டிப்பு என்பது யாராலும் சகிப்பதற்கில்லை. வேலையின்மையை அதிகரிக்கும் கொடிய செயல் இது. தமிழ்நாடு அரசின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிவிதிகளில் பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்த ஓய்வு வயது வரம்பு மீண்டும் 58 ஆக்குதல் காலத்தின் தேவையாகும். வேலையில்லா பட்டதாரிகளின் இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் விடியல் தருவதும் நம்பிக்கை அளிப்பதும் அண்மையில் பதவியேற்றிருக்கும் புதிய அரசின் இன்றியமையாத கடமை எனலாம். மேலும், பல்லாண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 33 ஆண்டுகால பணிநிறைவையும் ஓய்வுக்கான தகுதியாய் கொள்வதும் அவசியம். பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவினானே என்பது அரசு நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பணியாளர்களுக்கும் நடைமுறையில் பொருந்தக்கூடிய உகந்த உன்னத அறமாகும் என்பதை தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்துடன் மெய்ப்பிக்குமா? நிகழ்கால குடும்ப வறுமைநிலை மற்றும் எதிர்கால கனவு வாழ்க்கை ஆகியவற்றைத் தோள்களில் சுமந்து ஏங்கித் தவிக்கும் இலட்சக்கணக்கான இளைய சமுதாயத்தின் மீது கவிந்துக்கிடக்கும் அடர்த்தி மிக்க இருள் அகலுமா?
முனைவர் மணி கணேசன் 7010303298

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews