அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1

மத்திய அரசு சமீபத்தில் இந்தியப் பள்ளிக் கல்வித்துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில் மாநில வாரியாக இந்திய பள்ளிகளின் நிலை, மாணவ / மாணவியர்களின் சேர்க்கை விகிதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், இடைநிற்றல் விகிதம், கழிப்பறை வசதி என பல்வேறு வகையான தகவல்கள் இருந்தன.
அதில் இந்தியாவில் 22 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதியும், 30 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே கணினி வசதியும் உள்ளதென கூறப்பட்டுள்ளது. இந்தத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும், கல்வியின் தரத்திலும், சுகாதாரத்திலும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் செயல்பாடு குறித்து விரிவாக அலசினோம். அதன்முடிவில் நமக்கு தெரியவந்த தரவுகள் பற்றி இங்கு விரிவாக காணலாம்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 7,78,842 தொடக்கப் பள்ளிகள், 4,43,643 நடுநிலைப் பள்ளிகள், 1,51,489 உயர்நிலைப் பள்ளிகள், 1,33,734 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 15,07,708 பள்ளிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன. இந்தியாவில் அதிக பள்ளிகள் கொண்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 2,54,352 பள்ளிகள் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம் (1,33,379 பள்ளிகள்), மகாராஷ்டிரா (1,10,229 பள்ளிகள்), ராஜஸ்தான் (1,06,240 பள்ளிகள்), மேற்கு வங்கம் (95,755 பள்ளிகள்) ஆகியவை உள்ளன.
இந்தியாவில் அரசுப் பள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தம் 10,32,570 அரசுப் பள்ளிகள் உள்ளன. அதிக அரசுப் பள்ளி கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தரப் பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1,37,638 அரசுப் பள்ளிகள் உள்ளன. புவிவியல் ரீதியிலும், மக்கள் தொகை அடர்த்தியிலும் உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 24,310 தொடக்கப்பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் உள்ளன.
3,37,499 தனியார்ப் பள்ளிகளைக் கொண்ட இந்தியாவில், 60,121 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அதிகபட்சமாக, ராஜஸ்தானில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள பள்ளிகள் 8,407 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 3,460 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகளைப் பொருத்தவரை 12,382 பள்ளிகள் உள்ளன.
15 லட்சம் பள்ளிகளைக் கொண்ட இந்தியாவில் 96.8 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், தொடக்கப்பள்ளியில் 24,99,645 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளியில் 28,98,091 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளியில் 16,66,853 ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளியில் 26,22,988 ஆசிரியர்கள் என மொத்தம் 96,87,577 ஆசிரியர்கள் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.
அதேபோல், 58 ஆயிரம் பள்ளிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், 5.62 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிக ஆசிரியர்கள் பணிபுரியும் மாநிலங்களின் பட்டியலை ஆய்வு செய்தால், உத்தரப் பிரதேசத்தில் 14 லட்சத்து 23 ஆயிரத்து 995 ஆசிரியர்கள் உள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் 7.8 லட்சம் ஆசிரியர்களும், ராஜஸ்தானில் 7.7 லட்சம் ஆசிரியர்களும், பீகார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 6 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 96.8 லட்சம் ஆசிரியர்களில், 49.3 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 8.2 லட்சம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 36.02 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 3.25 லட்சம் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் 47 லட்ச ஆண் ஆசிரியர்களும், 49 லட்ச பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியப் பள்ளிகளில் அதிக பெண் ஆசிரியர்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 1.4 லட்சம் ஆண் ஆசிரியர்களும் - 4.2 லட்சம் பெண் ஆசிரியர்களும் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2.27 லட்சம் ஆசிரியர்களில், 79,490 ஆண்களும், 1,47,816 பெண்களும் பணியாற்றுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் 6,42,959 பெண் ஆசிரியர்கள் உள்ளனர்.
கடந்த 2019-20 ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின்படி, இந்தியாவில் 26.45 கோடி மாணவ / மாணவியர் உள்ளனர். இதில், 13.7 கோடி ஆண்களும், 12.7 கோடி பெண்களும் அடங்குவர். தமிழகத்தைப் பொறுத்தவரை 68 லட்சம் மாணவர், 65.1 லட்சம் மாணவிகள் என 1.33 கோடி பேர் உள்ளனர். இந்தியாவில் அதிக மாணவ / மாணவிகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில், உத்தரப் பிரதேசத்தில் 4.58 கோடி மாணவ, மாணவிகளும்; பீகாரில் 2.53 கோடி மாணவ, மாணவிகளும்; மகாராஷ்டிராவில் 2.30 கோடி மாணவ, மாணவிகளும் உள்ளனர். பள்ளி வாரியாக எடுத்துக் கொண்டால், அரசுப் பள்ளிகளில் 1,30,931,634 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,74,98,530 பேரும், தனியார் பள்ளிகளில் 9,82,09,302 பேரும், மற்ற பள்ளிகளில் 78,88,109 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
இதில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் பேரில், 22,14,892 பேர் மாணவர்கள், 23,78,530 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவ / மாணவிகளின் எண்ணிக்கையைத் தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றைக் குறித்து விரிவாகக் காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews