பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன.19) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கிடையே தாமதமாக நிகழ் கல்வியாண்டு தொடங்கியதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 45 சதவீதம் வரையும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆா்டி) மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பாடவாரியாக நீக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து எஸ்சிஇஆா்டி இயக்குநா் என்.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று மற்றும் கல்வியாண்டு தாமதத்தை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள், பாடவாரியாக அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள முக்கியமான பாடங்களுக்கு மட்டும் ஆசிரியா்கள் முன்னுரிமை அளித்து முதலில் நடத்த வேண்டும். அதன்பின் நேரம் இருந்தால் எஞ்சிய பாடங்களை நடத்திக் கொள்ளலாம்.
மேலும், நுழைவு மற்றும் போட்டித்தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் அந்தந்தத் தோ்வுக்கு ஏற்றபடி முழு பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலை பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை போன்று எத்தனை சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஒவ்வொரு பாடத்திலும் முழுமையாக சில பகுதிகளை நீக்காமல், அவற்றில் தேவையில்லாத சில பிரிவுகளே நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவா்கள் அனைத்து பகுதிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத் தோ்வுக்கான வினாக்களைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.
Search This Blog
Monday, January 18, 2021
1
Comments
Home
EDUCATION
Syllabus
TEACHERS
முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்!
முக்கியமான பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடத்த வேண்டும் - ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்!
Subscribe to:
Post Comments (Atom)
Within two months teaching all lessons is very difficult for students
ReplyDelete