இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களைத் தொடங்கலாம்: மத்திய அரசு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 12, 2021

Comments:0

இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களைத் தொடங்கலாம்: மத்திய அரசு அனுமதி

உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் தங்களின் வளாகங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர் சிறப்புக் கல்வி நிறுவனம்’ (Institutions of Eminence) என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அந்நிறுவனங்களின் கல்வி மற்றும் நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக இருக்கும்.
முதல் கட்டமாக ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 2019-ல் டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, ஐஐடி காரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் தங்களின் வளாகங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: * வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைத்துக் கொள்ளலாம். அதேபோலச் தலைசிறந்த இந்தியக் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் வளாகங்களை அமைத்துக் கொள்ளலாம். * ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 3 இடங்களில் வளாகங்களை அமைக்கலாம். எனினும் ஒரு கல்வி ஆண்டுக்கு அதிகபட்சம் ஒரு வளாகத்தை மட்டுமே அமைக்க முடியும். * முன்னதாகக் கல்வி, ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி மற்றும் நிர்வாகம் ஆகியவை குறித்த 10 ஆண்டுகாலத் திட்டமிடல், 5 ஆண்டுகாலச் செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். * அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் இதற்கான நிரந்தர வளாகத்தை உருவாக்க வேண்டும். * இவற்றை உருவாக்கும் முன்னர், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற்றே, புதிய வளாகங்களை வெளிநாடுகளில் உருவாக்க முடியும். இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews