மருத்துவ ரேங்க் பட்டியலிலும் முறைகேடா ? பிற மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

மருத்துவ ரேங்க் பட்டியலிலும் முறைகேடா ? பிற மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த மோசடிகளின் பின்னணி என்ன? ரேங்க் பட்டியலைக் கூட முறைகேடுகளின்றி வெளியிட லாயக்கற்ற அ.தி.மு.க. அரசு பட்டியலை உடனடியாக மாற்றி வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. 'திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களின் கனவு ஒவ்வொரு ஆண்டும் சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வின் ஆறாத் துயரம் தமிழக மாணவர்களை ஒருபக்கம் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியின் ஆசிகளுடன் நடக்கும் நீட் முறைகேடுகள் இன்னொரு பக்கம் மாணவர்களின் இதயத்தில் வேதனைத் தீயைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. 2020-21-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன. இன்னும் தொடருகிறது அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியல் முறைகேடுகளும், முன்னுக்குப்பின் முரண்பாடுகளும்! நீட் தேர்வுக்குத் தகுதியானவர்கள், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் கூறி வந்தாலும் - 2017-ல் எடப்பாடி ஆட்சியில், நீட் தேர்வை அனுமதித்ததில் இருந்து இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்விலும், அந்த நீட் தேர்வின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு தயாரிக்கும் ரேங்க் பட்டியலிலும், முறைகேடுகளும், மோசடிகளும் தடையின்றித் தொடர்கின்றன. நீட் தேர்வையே ஆள்மாறாட்டம் செய்து எழுதினார்கள்; அதுவும் அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அப்படி எழுதியவர்களில் சிலர் ஆதார் எண் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆள்மாறாட்ட மோசடியையே கைகழுவி விட்டது அ.தி.மு.க. ஆட்சி. நீட் தேர்வில் வேறு மாநிலத்தவர், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இங்கும் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியிலேதான். நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவியரை, காதில் இருக்கும் தோட்டைக் கழற்று, காலில் இருக்கும் கொலுசைக் கழற்று என்று நிந்தனை செய்யப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். நீட் முறைகேடுகள் படலம் இந்த ஆண்டும் தொடருவதாகச் செய்திகள் வெளிவந்திருப்பது; அ.தி.மு.க. ஆட்சியும், அதன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கரும் “குட்கா ஊழல்” “குவாரி ஊழல்” “ஆர்.கே.நகர் ஊழல்” “கொரோனா ஊழல்” ஆகியவற்றிற்கு மட்டுமே லாயக்கு; ஒளிவுமறைவின்றி – வெளிப்படையாக - முறைகேடுகளின்றி மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு அறவே லாயக்கில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்? அப்படி இடம்பெற்றவர்கள் எப்படி தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்கள்? அனைத்திற்கும் உரிய விடையோ விளக்கமோ அளிக்காமல்; ‘மைக்’கைப் பிடித்து, ஒவ்வொரு நாளும் பேட்டி என்ற பெயரில், வரிசை வரிசையாய் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டால் போதும் - மக்கள் நம்பி விடுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் - பல்வேறு காரணங்களுக்காக, அவருக்கு வக்காலத்து வாங்கும் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும் மனப்பால் குடிப்பது, அருவருக்கத்தக்கதும், அவமானகரமானதுமான செயல். மாணவர்களை வேதனையில் துடிக்க விட்டு, தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் இருக்கும் பெற்றோரை பதற வைத்து, ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு மோசடிகளை எந்தவித நெருடலும் இன்றி, அ.தி.மு.க. அரசு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டை அளித்து சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பியதோடு, அதை இந்த ஆண்டே நிறைவேற்றுவதற்குத் துரும்பைக் கூட தூக்கிப் போடாமல் வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி, ஆளுநருக்கும் - மத்திய உள்துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு எம்.பி.யும் நடவடிக்கை மேற்கொண்டு, இந்த ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைத்திடச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, நீட் கவுன்சிலிங்கிற்கு வரும் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ளாமல், விளம்பரத்திற்காக - கொரோனா காலத்திலும் நேரில் கலந்தாய்வு நடத்தி, அவர்களை அலைக்கழித்து அல்லல்படுத்துவது அ.தி.மு.க. அரசு. மாணவர்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்துவதே இன்றைக்கு அ.தி.மு.க. அரசின் பொழுதுபோக்காகப் போய் விட்டது. ஆகவே 2020-2021-ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமாதிரி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் யார் யார், அப்படிக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்த அமைச்சர்கள் யார் யார், பரிந்துரைக்குப் பெற்ற பரிசு என்ன என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ‘ஆன்லைனில்’ கவுன்சிலிங் நடத்திடத் தகுதி இல்லை அ.தி.மு.க. அரசுக்கு. எனவே கொரோனா நோய்த் தொற்று நேரத்தில், நேரடிக் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் கவனமாகச் செயல்படுவது மிக மிக முக்கியம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கவுன்சிலிங்கிற்கு வருவோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்திட வேண்டும் என்றும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்து, ‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக’ மாறிவிடக் கூடாது என்றும்; இது கமிஷன் வாங்கிக் கொண்டு விடப்படும் டெண்டர்கள் அல்ல - மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என்பதை அ.தி.மு.க. அரசு - குறிப்பாக, முதலமைச்சர் திரு. பழனிசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews