முதன் முதலில் மொழியை நம் தாயிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். தாய்க்குப்பின் தந்தையிடமிருந்து வெளியுலக நடை உடை பாவனைகளை, பண்பாட்டுக் கல்வியை, குலவித்தையை கற்றுக் கொள்கிறோம். “குலவித்தை கல்லாமற் பாகம் படும்” என்பது தமிழ் வாக்கு. அந்த வகையில் தாயும் தந்தையும் தான் ஒவ்வொருவருக்கும் முதல் ஆசிரியர்கள்.
என்னதான் பெற்றோர்களிடமிருந்து அரிச்சுவடிப் பாடம் கற்றாலும் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு, நாம் முறைசார்ந்த கல்வியைப் பெற ஆசிரியரை அணுக வேண்டியிருக்கிறது. அதனால் தான் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என நிரல் வகுத்தனர். நமக்கு குருமார்கள் மூவகைப்படுவர்.
ஒருவர் முறைசார் கல்வியைத் தரும் ஆசிரியர் என்னும் வித்யாகுரு. இரண்டாமவர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் நாம் உயர்வு அடைய நமக்கு தொழில் வித்தைகளைக் கற்றுத்தரும் க்ரியா குரு. ஒரு குறிப்பிட்ட செயலுக்காக நம்மைத் துாண்டுபவர் க்ரியா குரு. சந்திரகுப்த மவுரியரின் அரசியலுக்கு க்ரியா குருவாக வாய்த்தவர் அர்த்த சாஸ்திரம் கண்ட சாணக்கியர் என்பதும் காமராஜருக்கு குருவாக வாய்த்தவர் தீரர் சத்தியமூர்த்தி என்பதும் நாம் அறிந்தது.
ஞான குரு
மூன்றாம் வகையினர் ஞானத்தை வழங்கும் ஞானகுரு. நம் நாட்டில் இந்த மூவருக்கும் நன்றி பாராட்டும் மூன்று வெவ்வேறு தினங்கள் உண்டு.வித்யா குரு எனப்படும் முறை சார் கல்வி வழங்கும் ஆசிரியப் பெருமக்களை வணங்கிப் போற்றும் நாள் செப்டம்பர் 5ம் நாளான ஆசிரியர் தினம். க்ரியா குரு எனப்படும் தொழில்சார் குரு நாதர்களைப் போற்றும் நாள் விஜயதசமி.
முதல் நாள் ஆயுதப்பூஜைத் திருநாளில் தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளைக் கடவுளாக வழிபடுவதும் இரண்டாம் நாளில் தங்களுக்கு அந்தக் கருவிகளைக் கையாளக் கற்றுக் கொடுத்த குரு நாதர்களையே தெய்வமாக வணங்குவதும் பாரத பண்பாட்டின்அடையாளமாகும். இந்த இரு குருநாதர்களுக்கும் தங்கள் மாணவர்கள் இன்னார் எனத் தெரியும். மாணவர்களுக்கும் குருநாதர்களைத் தெரியும். ஞானகுருவை பெரும்பாலும் சிஷ்யர்களே தேடி வரித்துக் கொள்கின்றனர். எல்லா ஞானகுருவும் சிஷ்யர்கள் அனைவரையும் நேரடியாக அறிந்தே இருக்க வேண்டிய அவசியமில்லை.
உலக அளவில் ஆசிரியர்கள்
இன்று அக்டோபர் 5, சர்வதேச ஆசிரியர் தினம். 1994 தொடங்கி யுனெஸ்கோ என்னும் பன்னாட்டு கலாச்சார அமைப்பின் அறிவுறுத்தலின் படி உலக அளவில் ஆசிரியர்களை கொண்டாடும் நாள் இந்த நாள். இந்த ஆண்டுக்கான இந்த நாளின் மையக்கரு 'எதிர்காலம் குறித்த கனவுகளை மறு சீரமைக்கவும் சிக்கலான தருணங்களை எதிர்கொள்ளவும் மாணவர்களை வழி நடத்துவோராக' ஆசிரியர்கள் எங்ஙனம் திகழ்கின்றனர் என்பது.
'மெய்யான ஆசிரியர் என்பார் நம்மைச் சிந்திக்கத் துாண்டுபவரே ஆவார்' என்றார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் கோட்பாட்டை ஒட்டிய மையக்கரு இது.இதன் மூலம் சர்வதேச அளவில் ஆசிரியர்கள் எப்படி மாணவர்கள் எதிர்கொள்ளும் மனப்பிரச்னைகளைத் தீர்க்க உதவ முடியும் என்பதைக் குறித்தும் நீட் போன்ற தேர்வில் தோல்வி பயம் கவ்வி தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவத்திலிருந்து மாணவர்களை மீட்டு அவர்களுக்கு எப்படி நன்னம்பிக்கை அளிக்க முடியும் என்பதும் பேசு பொருள் ஆகி உள்ளது.
எப்படி வழிகாட்டுவது
ஒரு மாணவரின் தனித்திறமைக்கு ஏற்ப அவர் தன் எதிர்காலத்தைத் திட்டமிட எப்படி அவருக்கு வழிகாட்ட முடியும் என்பது முக்கியம். புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்கும் சூழலில், சர்வதேசத் தரத்திற்கு ஒரு மாணவர் தன்னை உயர்த்திக் கொள்ள அவரின் முறைசார் நுாலறிவு மட்டுமல்லாமல் மனோதிடம் பெரும் பங்கு வகிக்கும்.
தற்போதைய காலத்திற்கு யுனெஸ்கோ முன்மொழிந்துள்ள இந்த ஆண்டின் மையக்கரு வேறு எந்த நாட்டை விடவும் நம் பாரத தேசத்திற்கு பொருத்தமானதே.கொரோனா கொடுங்காலத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும் சூழல் கனிந்து வருகின்றன. ஏழு மாத கால முறைசார் கல்வியை நாம் இழந்திருக்கிறோம். இதை வரும் நாட்களில் கல்வித்துறை ஈடு செய்தாக வேண்டும். ஆசிரியர்களுக்கும் நெருப்பாற்றில் நீந்த வேண்டிய பெருஞ்சுமையாகவும் அழுத்தம் மிக்க ஆண்டாகவும் அமைந்திருக்கிறது.
வரலாற்றில் ஆசிரியர்கள்
வரலாற்றில் பல ஆசிரியர்கள் மாணவர்களைக் கொண்டு உலக சாதனைகளைப் புரிந்திருக்கின்றனர். கிரேக்கத்தின் மஹா அலெக்சாண்டர் உலகை வெற்றி கொள்ளும் பேராற்றல் பெற்றமைக்கு அவரின் ஆசிரியரான அரிஸ்டாடிலின் பங்கு மகத்தானது.உலக அளவில் புகழ்பெற்ற ஆசிரியர்களில் தியாகசீலராகத் திகழ்ந்தவர் காது கேளாத பார்வையற்ற மாணவியான ஹெலன் கெல்லரின் தனி ஆசிரியையான ஆனி சுலீவன்.
ஹெலன் கெல்லரின் ஒரு கையை நீருக்குள் அமிழ்த்தி மறு உள்ளங்கையில் வாட்டெர் எனும் ஆங்கிலச்சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாக எழுதி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் உண்டு என உணர்த்தி அவரை உச்சரிக்கச் செய்தவர். நல்ல மூளை வளர்ச்சியும் உடல் உறுப்புச் செயல்பாடுகளும் கொண்ட மாணவர்களுக்கே ஆரம்பக் கல்வி கற்பிப்பது கடினம் என்ற சூழலில் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு வாழக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் சேவையை அங்கீகரிக்க வேண்டிய நாள் இன்றைய நாள்.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் பெண் கல்வி மறுக்கப்படும் பழமை வாத நாடுகளிலும் கல்விப்பணி ஆற்றி வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு சர்வதேச ஆசிரியர் நாளில் பெரிதும் போற்றத்தக்கது.
யாருக்கு விருது
குளோபல் டீச்சர்ஸ் அவார்ட் என்ற பெயரில் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட வார்க்கி நிதியம் மற்றும் யுனெஸ்கோ அமைப்பு இணைந்து 2015 முதல்ஆண்டு தோறும் உலக அளவில் சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசளித்து வருகிறது. இது ஆசிரியப் பணிக்கான நோபல் பரிசு. இதற்கு நம் நாட்டிலிருந்து ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவதுண்டு.
குஜராத் லவாட் ஆரம்பப்பள்ளியைச் சேர்ந்த ஸ்வரூப் ரவல் 2019 ல் இறுதிச் சுற்றுக்கான 10 ஆசிரியர்களில் ஒருவராகத் தேர்வு பெற்றார். 2015 ல் முதலாவது உலக ஆசிரியர் விருது அமெரிக்காவைச் சேர்ந்த நான்சி அட்வெல் என்பவருக்குக் கிடைத்தது. அட்வெல் கற்பித்தல் தொடர்பாக ஒன்பது நுால்களை எழுதியுள்ளார். இவர் பரிசுத் தொகை முழுவதையும் தனது பள்ளிக்கு வழங்கினார். 2016 ல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆசிரியர் அனான் அல் உர்ருப், 2017 ல் கனடாவை சேர்ந்த பழங்குடி ஆசிரியையான மாகி மெக்டொன்னெல், 2018 ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கலை ஆசிரியையான ஆண்ட்ரியா சபிரக்கொவ், 2019 ல்கென்யாவை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் பீட்டர் தபிச்சீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்தியருக்கு கிடைக்குமா
நடப்பாண்டில் 140 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 12,000க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் பரிசீலனைக்கு உள்ள கடைசி 50 பேர் பட்டியலில் மூன்று இந்திய ஆசிரியர்கள் இடம் பெற்று உள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த குடிமைப் பயிற்சி ஆசிரியர் சுவாஜித் பெய்னே, மராட்டியத்தில் கிராம ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் டைசேல், டெல்லி கணினி ஆசிரியை வினிதா கார்க் ஆகியோர்களே அவர்கள். அக்டோபர் 12 ல் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.
இந்த ஆண்டு ஓர் இந்தியர் இப்பரிசினை வெல்வார் என்று ஆவலோடு எதிர்பார்ப்போம்.2021 ல் ஒரு தமிழரேனும் கடைசிப் பதின்மரில் இடம் பிடிப்பார் என நம்பிக்கையோடு காத்திருப்போம். ஏனெனில் அப்துல் கலாம் என்னும் அரிய பொக்கிஷத்தை உலகம் உயரப் பறக்கச் செய்த ராமேஸ்வரம் ஆசிரியர் சிவ சுப்பிரமணிய அய்யர் பிறந்த தமிழ்நாடு இது.
சுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராகப் பணி ஆற்றிய மதுரை, தமிழ் நாட்டின் பண்பாட்டுத் தலைநகர். எனவே மாணவர் உள்ளங்களை வென்று உலகை வெல்லும் புத்தாசிரியர்களை நாம் இனங்கண்டு சாதனை படைப்போம் என இந்த உலக ஆசிரியர் தினத்தில் உறுதி ஏற்போம்.
- நல்லாசிரியர் முனைவர் வை.சங்கரலிங்கம்
உதவித் தலைமையாசிரியர் (பணி நிறைவு)
மதுரை. 98421 11102 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
- நல்லாசிரியர் முனைவர் வை.சங்கரலிங்கம்
உதவித் தலைமையாசிரியர் (பணி நிறைவு)
மதுரை. 98421 11102 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.