நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியை மத்திய அரசு வளைத்தது போல அண்ணா பல்கலைக்கும் ஆபத்து? துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசு மறைமுக நடவடிக்கை; அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 13, 2020

Comments:0

நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியை மத்திய அரசு வளைத்தது போல அண்ணா பல்கலைக்கும் ஆபத்து? துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசு மறைமுக நடவடிக்கை; அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு விஷயத்தில் மாநிலங்களில் கட்டாயமாக்கி மருத்துவ படிப்புகளை எப்படி மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோ அதேபோல அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்ற தகுதியை வழங்குவதாக கூறி தொழில் கல்வியில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி நடப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சூரப்பாவும் தமிழக அரசின் சம்மதத்துடன்தான் அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், தொழில்நுட்ப அறிவியல் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும், அவற்றில் ஆராய்ச்சிகளைத் தொடர்வதிலும் முன்னேற்ற வழிமுறைகளைக் காண்பதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பரில் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப படிப்பில் முதல் நிலையில் அண்ணா பல்லைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில், 13 உறுப்புக் கல்லூரிகள், கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்துத் துறைகள், குரோம்பேட்டையிலுள்ள தொழில்நுட்ப நிறுவனம்(எம்ஐடி) மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. முன்னாள் ஜனாதிபதியும் விண்வெளி விஞ்ஞானியுமான அப்துல்கலாம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை உருவாக்கி, தேசிய அளவில் சிறப்பு நிலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பை குறைத்து விட தற்போது முயற்சிகள் நடந்துவருவதாக ஏற்கனவே கல்வியாளர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு உயர் சிறப்பு அந்தஸ்து என்ற திட்டத்தை 2016ம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 10 அரசு மற்றும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை உலகத்தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் இலக்காகும். இதற்கென புதிய விதிமுறைகளை 2017ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறை, விதிகளை வகுத்தது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து நிதிப்பங்களிப்பு தொடர்பான ஒப்புதல் கிடைத்த உடன் உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் என்ற சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அதற்கு வசதியாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதாவையும் பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்தது. மசோதாவில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வகித்து வருவது பல்கலைக்கழகத்தின் அதிக நேரத்தையும் ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது. இணைப்புப் பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காகவும் புதிய பல்கலைக்கழகத்தை தோற்றுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், இணைப்பு கல்லூரிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் என்றும், சிறப்பு அந்தஸ்து தரும் வகையில் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கவும் அரசு தீர்மானித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க தமிழக அரசும் இசைவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு சட்டப் பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு இதுவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுக்கவில்லை. மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களின் கடும் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தை பிரிப்பதால் பாரம்பரியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதற்கு துணை போகும் பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும். அவரது தன்னிச்சையான நடவடிக்கை, மத்திய அரசுக்கு துணை போவதாக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியிருப்பது ஏற்கக்கூடியதல்ல என்றார். அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்க கடும் எதிர்ப்பு உள்ள நிலையிலும், இதுவரை இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய பதிலை தெரிவிக்காத நிலையிலும் சிறப்பு அந்தஸ்து பெற நிதி திரட்டுவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்கு எழுதியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கல்வியாளர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில், தமிழக அரசின் செயலாளர் கடிதத்தின் பேரிலேயே தான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக சூரப்பா நேற்று தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசுக்கு நன்றாக தெரிந்தே அல்லது தமிழக அரசின் மறைமுக ஆதரவுடன் இந்த சம்பவங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக சென்று விடும் என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாநில அரசே நிதி ஒதுக்காத நிலையில் தனிப்பட்ட முறையில் துணைவேந்தர் நிதி திரட்ட முன்வந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். காரணம் நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு அதன் மூலம் தரமான மருத்துவக் கல்வியை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று கூறிவிட்டு, மருத்துவ கல்வியை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிட்டது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீரானது. அதேபோல உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் என்ற அந்தத்ஸ்தை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வழங்குவதாக ஆசை வார்த்தை காட்டியும், அதற்காக 1000 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும் என்று உறுதி அளித்துள்ளது. அந்த நிதி உதவி பெற்று இயங்குவதின் மூலம் அண்ணா பல்கலைக் கழகமும் முழுக்க முழுக்க மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்வதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிறப்புத் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது. 2 மாநில அரசினுடையது. மாநில பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்கலைக்கழக தர மேம்பாட்டிற்கு மாநில அரசும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற புதிய நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. இவ்விரு பல்கலைக்கழகங்களும் உயர் சிறப்பு அந்தஸ்து பெற ரூ.2000 கோடிக்கு மேல் நிதி தேவை. மத்திய அரசு தருகின்ற ரூ.1000 கோடிக்கு மேல் செலவாகும் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும் நிதிச் சுமை என்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வேண்டாம் என்று மேற்குவங்க அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு தொடர்ந்து மவுனம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டினுடைய சமூக பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். தற்போது ‘உலகத் தரம்’ என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாத அதிமுக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்ப்பதற்கான வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விஷயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும் என்று மக்களிடம் பொய் சொல்லி படிப்படியாக அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டுவர திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் கொதித்தெழுந்துள்ளனர். தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. தற்போது உலகத் தரம் என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 189 ஏக்கரில் பல்கலைக் கழகம் * அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978 செப்டம்பர் 4ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் நினைவாக இந்தப் பெயரை அப்போதைய அதிமுக அரசு சூட்டியது. * பல்கலைக்கழகத்துடன் 4 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. * கிண்டி பொறியியல் கல்லூரி 1794ம் ஆண்டும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி 1944ம் ஆண்டும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி 1949ம் ஆண்டும், கட்டடக் கலை மற்றும் திட்டமிடல் கல்வி நிறுவனம் 1957ம் ஆண்டும் உருவாக்கப்பட்டன. * அண்ணா பல்கலைக்கழகமானது 189 ஏக்கரில் பரந்து விரிந்த கட்டடங்களுடனும், பசுமை நிறைந்த மரங்களுடனும் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வளாகம் சென்னை குரோம்பேட்டையிலும், மூன்றாவது வளாகம் தரமணியிலும் செயல்பட்டு வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews