கொரோனா வைரஸ் பரவல் குறையாததால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் மற்றும் என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, இந்தாண்டில் நடப்பதற்கு சாத்தியமில்லை. அதனால், அடுத்தாண்டுக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
'சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய நிர்வாக மற்றும் புள்ளியியல் நடவடிக்கையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது.
மிகப்பெரிய கையேடு:
அரசுப் பணியாளர்கள், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, இந்தக் கணக்கெடுப்பை எடுப்பர். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட விபரங்கள் தெரிய வரும். அதன் மூலம், தேவையான திட்டங்களை வகுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய கையேடாக, இந்தக் கணக்கெடுப்பு இருக்கும்.
வரும், 2021ம் ஆண்டு, மார்ச், 1ம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு, நாடு முழுதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் போன்ற பனிப் பொழிவு உள்ள பகுதிகளில், இந்தாண்டு, அக்., 1ம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு, கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பும் வழக்கமாக எடுக்கப்படும். என்.பி.ஆர்., என்பது, நாட்டில் உள்ள இயல்பான குடிமக்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதாகும். இது கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் எடுக்கப்படும்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு குறையாமல் குடியிருப்போர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். கடைசியாக, 2010ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, என்.பி.ஆர்., கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
கைவிரல் ரேகை பதிவு
அதன் பிறகு, 2015ல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, என்.பி.ஆர்., தகவல்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, குடிமக்களின் ஆதார் எண் மற்றும் மொபைல் போன் எண் ஆகியவை சேகரிக்கப்பட்டன. தற்போது கூடுதலாக, 'டிரைவிங் லைசென்ஸ்' எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் சேகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது, தன்னார்வ அடிப்படையில் சேகரிக்கப்படும்.
என்.பி.ஆர்., கணக்கெடுப்பின் போது, ஒருவர் குடியிருக்கும் பகுதி தொடர்பான தகவல்களுடன், அவர்களுடைய கைவிரல் ரேகை பதிவு போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும். பெயர், தந்தை - தாயின் பெயர், பிறந்த தேதி, திருமணமானவரா என்ற விபரம், பிறந்த இடம், தற்போதுள்ள முகவரி, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, பணி விபரம் போன்றவை சேகரிக்கப்படும்.
கடந்த ஆண்டு, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. அதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், என்.பி.ஆர்., கணக்கெடுப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:
சிறுபான்மையின மக்களை, நாட்டில் இருந்து வெளியேற்றவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக, சில அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்தன.இதை, மத்திய அரசு மறுத்தது. யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று தெரிவித்தது. ஆனாலும், என்.பி.ஆர்., கணக்கெடுப்பு நடத்துவதற்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த ஆண்டு, ஏப்., 1 முதல், செப்., 30 வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட கணக்கெடுப்புகள் நடத்தவும், என்.பி.ஆர்., கணக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதால், நாடு முழுதும், மார்ச், 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளதால், இந்தக் கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. அதனால், அடுத்த ஆண்டுக்கு இவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, வைரஸ் பரவல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆர்., கணக்கெடுப்புகள் நடத்துவது உகந்ததாக இருக்காது.
இந்தாண்டு வாய்ப்பில்லை:
மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதால், எந்த பாதிப்பும் இருக்காது. அதனால், இந்தக் கணக்கெடுப்புகள், அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எப்போது துவங்குவது என்பது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டில் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்பது மட்டும் நிச்சயம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups