மருத்துவப் படிப்பு: 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் என திமுக கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 20, 2020

Comments:0

மருத்துவப் படிப்பு: 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் என திமுக கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என, திமுக கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி எனவும், மத்திய அரசின் நிபந்தனைகள் அநீதியானவை எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு ஏமாற்றமளிக்கிறது. 27% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்காத மத்திய அரசு, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருப்பது காலம் தாழ்த்தும் உத்தியே தவிர வேறில்லை. மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் சார்பில், மருத்துவக் கல்விக்கான உதவித் தலைமை இயக்குநர் மருத்துவர் சீனிவாஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மீண்டும், மீண்டும் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது; அதில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, அகில இந்திய தொகுப்புக்கான இடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டியிருப்பதாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு சிறிதும் விருப்பம் இல்லை என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஏதேனும் வாய்ப்புகள் இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசின் பதில் மனுவில் இரு இடங்களில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. முதலில், 11 ஆவது பத்தியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கில், 'மாநிலங்களில் இருந்து பெறப்படும் இடங்களுக்கு மாநில வாரியான இட ஒதுக்கீட்டை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்' என்று பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான நிபந்தனைகள் கடுமையானவை; அநீதியானவை.
அந்த நிபந்தனைகளின் விவரம் வருமாறு:
1. மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது. அதன்படி பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.
2. அவ்வாறு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் போது அகில இந்திய தொகுப்பில் இப்போது நடைமுறையில் உள்ள பொதுப்போட்டிக்கான ஒதுக்கீடு 77.5%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடி வகுப்பினருக்கு 7.5% இட ஒதுக்கீட்டின்படி எத்தனை இடங்கள் கிடைக்கின்றனவோ, அந்த இடங்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒத்துழைப்புடன் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் இந்த நிபந்தனைகள் மிகவும் ஆபத்தானவை. மத்திய அரசின் சார்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டையே மாநில அரசின் ஒதுக்கீடாக மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக கட்டாயப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும். இந்த ஆபத்தான திட்டத்தை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதத்திற்கும் கூடுதலாக 50% இட ஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது என்பதை நன்றாக அறிந்து கொண்டு, அந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் இதுவே தவிர, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விருப்பம் அல்ல. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டுமானால், அதற்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்த வேண்டும். அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளிக்குமா? என்பது தெரியாது. இவை அனைத்தும் போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும். இரண்டாவதாக, சலோனி குமாரி வழக்கில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால், அதை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பதில் மனுவில் 14-வது பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாமாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்க தயாராக இல்லை என்பது தான் இதன் பொருளாகும். உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும், அது தங்களின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இல்லாத ஒன்றை திமுக சொந்தம் கொண்டாடுவதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி ஆகும்; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கட்சிகள் அனைத்தும், ஏதேனும் ஒரு கால கட்டத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்த கட்சிகள் தான் என்று பதில் மனுவில் கூறியிருப்பதன் மூலம், இந்தக் கட்சிகள் பதவியில் இருந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்வி முழுக்க, முழுக்க திமுகவுக்கு தான் பொருந்தும். 2004-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற சில காலங்களிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்றும், அதை எதிர்த்து அபய்நாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதையும் அறிந்தேன். உடனடியாக, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக எனது அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்ய வைத்தேன். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்ததைத் தொடர்ந்து தான் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் தான் போராடி பெற்றுத் தந்தார். 2008-09 கல்வியாண்டில் தொடங்கி மூன்று தவணைகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட 27% இட ஒதுக்கீடு, 2010-11 ஆம் ஆண்டில் தான் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது மத்திய அரசில் பாமக அங்கம் வகிக்கவில்லை. அவ்வாறு அங்கம் வகித்திருந்தால், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு எவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டில் முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததோ, அதேபோல் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்து இருந்திருக்கும். ஆனால், அந்த காலத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அதுமட்டுமின்றி, திமுகவைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது திமுக நினைத்திருந்தால் மிகவும் எளிதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அப்போது அவர்களுக்கு மனமும் இல்லை; நேரமும் இல்லை. இப்போது கூட கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்காக பாமக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அப்போதெல்லாம் அமைதியாக இருந்த திமுக, இப்போது தேர்தலை மனதில் கொண்டு அரசியல் லாபம் தேடத் துடிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இப்போதுள்ள கட்டமைப்பின்படியே 27% இட ஒதுக்கீடு பெறும் உரிமை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளது. அந்த உரிமையை வென்றெடுப்பதற்காகத் தான் பாமக கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது. அந்த வகையில் நீதிமன்றங்களில் சட்ட ரீதியாகவும், மத்திய அரசிடம் அரசியல் ரீதியாகவும் போராட்டங்களை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தராமல் பாமக ஓயாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் பாமக ஒரு சமூகநீதிக் கட்சி" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews