மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பு: அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடம் வெறும் 3.8 சதவீதமே - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 08, 2020

Comments:0

மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பு: அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடம் வெறும் 3.8 சதவீதமே

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடந்து முடிந்துள்ள மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்புக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வின்படி பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கப் பெற்ற இடங்கள் வெறும் 3.8 சதவீதமே. சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து இந்த சமூக அநீதியை வீழ்த்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: “ ‘நீட்’ என்னும் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்பை வழிப்பறிபோல் பறித்துக் கொண்டிருக்கும் கொள்ளை ஒருபுறம் இருக்க, மருத்துவக் கல்லூரி, பட்ட மேற்படிப்புக்குரிய இடங்கள் கண்ணுக்கெதிரே கொள்ளை போகும் கொடூரத்தை என்னவென்று சொல்வோம்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்னும் சாதனை தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. அரசு மருத்துவக் கல்லூரியின் எண்ணிக்கை 26. இதனைத் திராவிட இயக்க ஆட்சியின் சாதனை என்று மார்தட்டியும் கூறலாம். ஆனால், இதுதான் ஆதிக்கக் கூட்டத்தின் கண்களைக் கருவேல் முள்ளாகக் குத்துகிறது; நேரடியாக - சமூக நீதி தேவைப்படுகிற மக்களின் வாய்ப்பைப் பறிக்க முடியாத நிலையில், பல்வேறு கொல்லைப்புறங்களையும், சந்து பொந்துகளையும் உண்டாக்கி, நாம் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இடங்களைக் கபளீகரம் செய்யும் கொடுமை நடக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 1,758. இத்தனை இடங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. இந்த இடங்களில் 50 விழுக்காடு மத்திய தொகுப்புக்குத் தாரை வார்க்க வேண்டும். அதாவது நம் வரிப் பணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த இடங்களில் 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்குச் சென்றுவிடுகின்றன. இந்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாதாம். தமிழ்நாட்டிலோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 விழுக்காடு இடங்களும் சட்ட ரீதியாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 879 இடங்களில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எத்தகைய மோசடி. இதன் காரணமாக 440 பட்ட மேற்படிப்பு இடங்களை ஆண்டுதோறும் நாம் இழந்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான முதற்கட்டக் கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடந்து முடிந்துவிட்டது.
அகில இந்திய அளவில் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 13,237. இந்த இடங்கள்பற்றிய விவரங்கள் வருமாறு: அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 8,833 இடங்கள் (ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 50 விழுக்காடு) மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 717 இடங்கள். தனியார்க் கல்லூரிகளிலிருந்து 3688. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 9,550 இடங்களில் 7,125 இடங்கள். பொதுப்பிரிவிற்கு (74.6 விழுக்காடு) சென்றுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371. விழுக்காடு அளவில் சொல்லவேண்டுமானால், வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே. தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.,) கிடைத்த இடங்கள் 1,385 (விழுக்காட்டில் 14.5), பழங்குடியினருக்கு (எஸ்.டி.,) 669 இடங்கள் (விழுக்காடு அளவில் 7) ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்தன. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வெறும் 3.8 விழுக்காடு என்னும் அளவுக்கு அடிமட்டத்துக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை ஏற்ப்பட்டுள்ளது. அடுத்த கொடுமையைக் கேளுங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பவர்களுக்கு, சட்ட விரோதமாக அவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டதே, அந்த உயர் சாதி மக்களுக்கான இடங்கள் எத்தனை தெரியுமா? 653. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக 282 இடங்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த முன்னேறிய வகுப்பினர் என்றால் யார் தெரியுமா? மாதம் 66 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடியவர்கள்.
மண்டல் குழுப் பரிந்துரையின்படி மத்திய அரசு துறைகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு உண்டு என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், இந்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. மண்டல் குழுப் பரிந்துரை ஆவணத்தின்படி பார்த்தாலும் இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் 52 விழுக்காடாகும். இந்த அளவு மக்கள் தொகையில் பெரும்பாலோராக உள்ள மக்களின் தலையில் மண்ணை வாரிப் போட்ட பிறகும், இந்தப் பெரும்பாலான மக்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதால், இன்னும் என்னென்ன அநீதிகளும், கொடுமைகளும் இம்மக்களின் தலையில் விடியப் போகிறதோ என்கிற அபாயகரமான கொடுவாள் இந்த மக்களின் கழுத்துக்குக் கூர் தீட்டப்படுகிறதோ தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து (1950, ஜனவரி 26) 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திராவிடர் கழகத்தின் 42 மாநாடுகள், 16 போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓயாப் போராட்டம் காரணமாகத்தான் வாராது வந்த மாமணியாம் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலாக 1990 ஆகஸ்டில் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 இடங்கள் கிடைக்கப் பெற்றன. அந்த அரும்பெரும் சமூக நீதி சாதனைக்காக அவர் ஆட்சியைப் பறிகொடுத்தார் என்பது வரலாற்றின் முக்கிய அத்தியாயம். அந்தக் காரணத்துக்காக அவரின் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தான் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் அட்டகாசமாக அமர்ந்துள்ளார்கள். என்னே விபரீத ஜனநாயகம். 1990 இல் சட்டம் வந்தாலும் - அதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு முதல்தான் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் அவலம் சொல்லி மாளாது.
இன்னொரு முக்கியமான தகவல். வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் மட்டும்தான் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, முதன் முதலாகக் கணக்குத் திறக்கப்பட்டது. மத்திய அரசு துறைகளில் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் ஆட்சியில் அர்ஜூன்சிங் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி 2008 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனாலும், கைக்கு எட்டியது - வாய்க்கு எட்டவில்லை என்பது போல, மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லை - கிடையவே கிடையாது என்று அடம்பிடிக்கப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமல்ல - மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு எதிரான ஜனநாயகப் படுகொலை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் கட்சிக்கு அப்பாற்பட்டு சமூக நீதி சக்திகள் ஒருங்கிணைந்து இந்த அநீதிக்கு - அப்பட்டமான சட்ட மீறலுக்கு ஒரு முடிவைக் காண்பது அவசியம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். விரைவில் தமிழ்நாட்டில் இதற்கான தொடக்கத்தை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நீதி என்றாலே, அது தந்தை பெரியார் பிறந்த மண் தானே முன் கையை நீட்டவேண்டும்”. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews