இக்கட்டில் இந்தியா!| ஈரான்- அமெரிக்கா மோதல் குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

இக்கட்டில் இந்தியா!| ஈரான்- அமெரிக்கா மோதல் குறித்த தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சர்வதேசப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்திருப்பது பிரச்னையை மேலும் கடுமையாக்கக்கூடும். அமெரிக்கப் படைகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்திருப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்கு தலையும் நடத்தியிருக்கிறது. அமெரிக்கா தனது எதிர்வினையை எப்படி நிகழ்த்தப் போகிறது என்பதை உலகமே அதிர்ச்சியுடன் எதிர்நோக்குகிறது. இராக்கில் அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்தார். அதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவுப் படையினர் மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஈரான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் முற்றுகையிட்டனர். பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுப் படையின் தலைவர் காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஏர் இந்தியா உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் ஈரான், இராக், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் தங்கள் விமான சேவையை நிறுத்தியிருக்கின்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுக்குமேயன்றி உடனடியாக சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. உலக நிதிச் சந்தை தடுமாறுகிறது. தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கக்கூடும் என்பதுதான் நமது கவலை. ஈரானும் அமெரிக்காவும் ஒருவர் மாற்றி ஒருவர் தாக்குதல் நடத்தும் நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. நமது கச்சா எண்ணெய்த் தேவையின் 80%-ஐ இறக்குமதியாகத்தான் பெறுகிறோம். ஈரானிலிருந்தான கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நாம் குறைத்துவிட்டாலும்கூட, இப்போதும் நமது கச்சா எண்ணெய்த் தேவைக்கு பாரசீக வளைகுடாவைத்தான் நம்புகிறோம். ஈரான், சவூதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் போரால் பாதிக்கப்பட்டால் அதன் மறைமுகப் பாதிப்பு இந்தியாவுக்கும் இருக்கும்.
பாரசீக வளைகுடாவில் ஏறத்தாழ 70 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 40 பில்லியன் டாலர் (ரூ.2.8 லட்சம் கோடி) அளவிலான தங்களது சேமிப்பை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். பதற்றச் சூழல் மேலும் அதிகரித்து தொடருமானால், இந்தியாவுக்கு வரும் அந்நியச் செலாவணி தடைபட்டு நமது பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும். பொருளாதாரப் பாதிப்புகள் மட்டுமல்லாமல், அங்கே பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை போர்ச்சூழல் கடுமையாகும் நிலையில், அவர்களைப் பாதுகாப்பாகத் தாய்நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம் இப்போதே முறையாகத் திட்டமிட்டு, பத்திரமாக அவர்களை அழைத்து வருவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஈரானிலுள்ள 52 இடங்களைக் குறிவைத்துத் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். அவற்றில் கச்சா எண்ணெய் கட்டமைப்பு உள்ளிட்ட பொருளாதார முதலீடுகள் கட்டாயம் இடம்பெறும். இந்தியாவின் முதலீட்டுடன் உருவாக்கப்படும் சாப்ஹார் துறைமுகமும் அதில் அடங்கும். சாப்ஹார் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியா உருவாக்கியிருக்கும் பொருளாதார எதிர்பார்ப்புகள் தகரக்கூடும். சாப்ஹார் துறைமுகத்தை அமெரிக்கா தாக்காமல் இருப்பதை இந்தியா எப்பாடுபட்டாவது உறுதிப்படுத்த வேண்டும்.
அமெரிக்கா, ஈரான் இரண்டு நாடுகளுடனும் இணக்கமான உறவை இந்தியா பேணி வருகிறது. அதனால்தான் ஈரானின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜாவத் ஸெரீஃப் மத்திய ஆசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்புடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதை வரவேற்றிருக்கிறார். அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் ஸெரீஃப்பின் இந்த அறிவிப்பு, சமரசப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள மறைமுகமாக இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள். இந்திய ஆதரவை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது என்பதை, இந்தியாவின் மீது ஈரான் உளவுப் படையின் தலைவர் காசிம் சுலைமானி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்று அதிபர் டிரம்ப் கூறியதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மூத்த ஈரானியத் தலைவர் என்று உளவுப் படையின் தலைவர் சுலைமானியை வர்ணித்த இந்தியா, நேரடியாக அமெரிக்கத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. படுகொலை குறித்துக் குறிப்பிட்ட இந்திய அறிக்கை, "இரு தரப்பும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று பட்டும் படாமலும் கருத்துத் தெரிவித்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் மேலும் வலுக்குமேயானால் இதே நிலைப்பாட்டை இந்தியா தொடர முடியாது. அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள முடியாத, ஈரானையும் விட்டுக்கொடுக்க முடியாத இக்கட்டான நிலைமை இந்தியாவுக்கு! அமெரிக்கா - ஈரான் மோதல் பேரழிவுக்கு வழிகோலுமோ என்கிற அச்சம் உலகுக்கு!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews