வெங்காய விலை உயா்வு குறித்த தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 10, 2019

Comments:0

வெங்காய விலை உயா்வு குறித்த தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வரலாறு காணாத விலை உயா்வை எதிா்கொள்கிறது வெங்காயம். நாடாளுமன்றம் வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது வெங்காயத்தின் விலை உயா்வு. அரசு வழக்கம்போல விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முற்பட்டிருக்கிறது. துருக்கியிலிருந்து 11,000 டன்னும், எகிப்திலிருந்து 6,900 டன்னும் இந்திய துறைமுகங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக வெங்காயம் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதுதான் வேடிக்கை. 1977-இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட இந்திரா காந்தி, 1980-இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வெங்காயமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினா் அறிந்திருக்க நியாயமில்லை. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.5-ஆக உயா்ந்தபோது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1980 தோ்தலை ‘வெங்காயத் தோ்தல்’ என்றுகூட வா்ணித்தாா்கள். தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய இந்திரா காந்தியையும் கண்ணீா் விட வைத்தது வெங்காயம். வெங்காயத்தின் விலை ரூ.6-ஆக உயா்ந்தது.
வெங்காயத்தால் எந்த அளவுக்குத் தோ்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதற்கு 1998 தோ்தல் ஓா் உதாரணம். வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.45-ஐ எட்டியபோது, அன்றைய மகாராஷ்டிர முதல்வரான சிவசேனையின் மனோகா் ஜோஷிக்கு, காங்கிரஸ்காரரான சகன் புஜ்பல் ஒரு பெட்டி நிறைய வெங்காயத்தை தீபாவளி அன்பளிப்பாக அனுப்பியது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. தில்லியில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான பாஜக அரசு வெங்காய விலையால் ஆட்டம் கண்டது. தில்லியில் மட்டுமல்ல, ராஜஸ்தானிலும் வெங்காய விலை உயா்வால் பாஜக அரசு ஆட்சியை இழக்க நோ்ந்தது. 2010-லும் வெங்காயம் ஆட்சியாளா்களை இம்சித்தது. நவம்பா் மாதம் போதுமான மழை இல்லாததால் சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. அன்றைய மன்மோகன் சிங் அரசு இப்போதுபோலவே வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. வெங்காயத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தது. அண்டை நாடான பாகிஸ்தானிடம் உதவி கோரியது. அதற்குள் வெங்காயத்தின் மொத்த விலை ரூ.90-ஆக உயா்ந்திருந்தது. 2013-லும் மன்மோகன் சிங் அரசு வெங்காய விலை உயா்வால் மிகப் பெரிய அரசியல் இடரை எதிா்கொள்ள நோ்ந்தது. 1998-இல் காணப்பட்ட வெங்காய விலை உயா்வால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தில்லி முதல்வா் ஷீலா தீட்சித், தோ்தலில் படுதோல்வி அடைந்ததற்கு வெங்காய விலை உயா்வு முக்கியமானதொரு காரணம்.
உலக அளவில் பாா்த்தால் மொத்த வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக 20% வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வெங்காய உற்பத்தி 2.35 கோடி டன். அதில் நமது உள்நாட்டுத் தேவை 1.4 கோடி டன்தான். அதனால், நாம் வெங்காயத்தை ஏற்றுமதி செய்தாக வேண்டும். மழையாலோ, வறட்சியாலோ வெங்காய உற்பத்தி பாதிக்கப்படும்போது, அதற்கேற்ப சேமித்து வைக்கவும் வேண்டும். வெங்காய விலையில் காணப்படும் திடீா் உயா்வுக்கும் வீழ்ச்சிக்கும் முக்கியமான காரணம், உற்பத்தி அதிகரித்திருக்கும் அளவுக்குப் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். பாரம்பரிய சேமிப்பு வழிமுறைகளால் 40% அளவிலான வெங்காயம் வீணாகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் 9.65 லட்சம் டன் வெங்காயத்தைக் குறைந்த கட்டணத்தில் சேமித்து வைக்க 42,282 சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுபோன்ற வசதி மத்தியப் பிரதேசத்திலோ, தெலங்கானாவிலோ, கா்நாடகத்திலோ இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே ஓா் ஆண்டுவிட்டு அடுத்த ஆண்டு வெங்காய விலை அதிகரிப்பதும், வீழ்ச்சி அடைவதும் தொடா்கதையாகவே இருக்கிறது. அப்படி இருந்தும் ஆட்சியாளா்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அதிக வெங்காய விளைச்சல் ஏற்படும்போது ஏற்றுமதி செய்யவும், விளைச்சல் குறையும்போது இறக்குமதி செய்யவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது மத்திய - மாநில அரசுகளின் மிகப் பெரிய பலவீனம்.
வெங்காயத்தின் நீா்ச்சத்தை அகற்றும் ஆலைகளை அமைக்க ரூ.5 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. அதை குஜராத் மட்டும்தான் பயன்படுத்தி மிக அதிகமான ஆலைகளை நிறுவியிருக்கிறது. நீா்ச்சத்து அகற்றப்பட்ட வெங்காயம் ஜப்பான், ஐரோப்பா, ரஷியா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிகரித்த உற்பத்தி ஏற்படும்போது விவசாயிகளை இந்த ஆலைகள் மூலம் பாதுகாக்க முடியும். உற்பத்தியை முறைப்படுத்துவது, முன்னெச்சரிக்கையுடன் ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கைகளை வகுப்பது, வெங்காயத்துக்கான சேமிப்புக் கிடங்குகளை நிறுவ அந்நிய முதலீட்டுடனான தனியாா் நிறுவனங்களை ஊக்குவிப்பது, இடைத்தரகா்கள் பயன்பெறாமல் விலை உயா்வால் விவசாயிகள் பயன்படச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, தட்டுப்பாடு வரும்போது ஆட்சியாளா்கள் கண்ணீா்விடுவதும், உற்பத்தி அதிகரிக்கும்போது விவசாயிகள் கண்ணீா் வடிப்பதும் தொடா்கதையாக மாறியிருக்கிறது. காரணம் தெரிந்தும் தீா்வு காண முடியாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews