அரசுப் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீடு சரியா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 12, 2019

Comments:0

அரசுப் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீடு சரியா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அதாவது தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் கற்றல், மருத்துவம், உளவியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் பாடவேளை, தேர்வுக் காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்கள் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அனுமதியை அந்தந்த பள்ளி முதல்வர்களே தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்றும், பாடவேளை, தேர்வுக்காலம் பாதிக்காத வகையில் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை பள்ளி முதல்வர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். கூடுதலாக சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையில், தனியார்கள் பள்ளிக்கு வந்து இச்செயல்களில் ஈடுபட்டால் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது என்று பெற்றோர்களும் அச்சப்படு கின்றனர். இதுகுறித்து கல்வியாளர் பேராசிரியர் பி.இரத்தினசபாபதியிடம் பேசினோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம். ‘‘சமீப காலமாக பள்ளிக் கல்வித்துறையில் ஆணைகள் பல வந்தவாறுள்ளன. நிர்வாகத் திறன்மிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு பயன்மிக்க வழிகாட்டல்களை வழங்கிவருகிறார்கள். சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கயிறுகளை கையில் அணிந்துவருவதைத் தடுத்திடல் வேண்டுமென்ற ஆணை நடுநிலையாளர்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டது.
எதிலுமே குதர்க்கம் பேசிவரும் ஒருவர் கல்வித் துறை சார்ந்த ஓர் இயக்கத் தேர்தலில் தோல்வி கண்ட விரக்தியில் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தார். இயக்குநர் விடுத்த ஆணைக்கு மதச்சாயம் கொடுத்தார். அந்த ஆணைக்கு முதலில் கல்வி அமைச்சர் தந்த மழுப்பலான பதிலுரை இயக்குநருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. எனினும் ஊடகங்களின் வாயிலாக இயக்குநர் ஆணைக்கு வரவேற்பு இருந்தது. குழப்பம் விளைவிக்க நினைத்தவரின் எண்ணம் ஈடேறவில்லை. மதத்தை முதன்மைப்படுத்தி அரசியலாடும் கட்சியினர் கல்வித் துறையில் எப்படியும் புகுந்துவிடவேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கூடங்களில் தொண்டு நிறுவனங்களை கற்பிப்பதற்கு அனுமதிக்கலாம் என்ற ஆணையினை பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பவைத்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வி இயக்குநரின் விருப்பில் எழுந்த ஆணையாக இருக்காது இது. கல்வியின் வளர்ச்சி, ஒழுங்கு முதலியவற்றிற்கு முதலிடம் தருவனவாக அவருடைய அலுவலக நடைமுறைகள் இருக்கும்போது, தனியார் தொண்டு நிறுவனத்தினர்களைப் பள்ளிகளில் பாடம் நடத்த இசைவு தருவ தென்பது விரும்பத்தக்கதன்று’’ என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் இரத்தினசபாபதி. தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகள் செயல்பாட்டில் தலையிட அனுமதி வழங்கியதற்கான காரணம் எதுவானாலும், அது எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் என்பதை விவரிக்கும்போது, ‘‘தரமிக்க ஆசிரியர்கள் தேவை என்பதற்காக தகுதித் தேர்வுகள் வாயிலாக ஆசிரியர்களை பணியமர்த்துதல் ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில் கல்வியின் நடைமுறையை அறியாத வெளிஆட்களை கற்பிக்க அனுமதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்பதை இயக்குநரே உணர்வார். இருப்பினும் இதுபோன்ற ஆணைகள் எத்தகைய, யாருடைய அழுத்தத்தால் பிறப்பிக்கப்பட்டதென்று தெரியவில்லை. தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தனியார் அமைப்புகளுக்கு பள்ளிக்கூடங்களில் கற்பித்தலுக்கு அனுமதி வழங்கப்படுமாயின் கற்பித்தல் முறையும் ஒழுங்கும் தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையும் பாழ்படுவதோடு, மாணவர்களும் இனம் தெரியாதவர்களிடம் கற்கும் சூழலுக்குத் தள்ளப்படுவர். பாடத்திட்டம், கற்பித்தல் முறை என எதுவும் அறியாத புதியவர்கள் கற்பிக்கும்போது மாணவர்களின் கற்றல் ஆர்வம் குறைவடையும். கற்றலில் பின் தங்கிவிடுவர். மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
சமீப நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு பெரும் சிக்கல் நிறைந்ததாக ஆகிவருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பியே தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகின்றனர். ஒரு சில ஆசிரியர்களாலேயே சில சமயம் சிக்கல்கள் உருவாகும் சூழலில், வெளியாட்கள் மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எந்த வகையில் பாதுகாப்புடையவர்களாக இருப்பர்? எனவே, கற்றல் சூழல், பள்ளிக்கூட ஒழுங்கு, மாணவர்கள் பாதுகாப்பு என எந்நிலையிலும் அரசின் ஆணை வேண்டத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, இவ்வாணையினை இயக்குநர் திரும்பப் பெறவேண்டும் என்பதே ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்கள் என எல்லாத் தரப்பினரின் எதிர்பார்ப்பு’’ என்கிறார். மத்திய அரசின் தலையீடே இதுபோன்ற அறிவிப்புகளுக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டி கூறும்போது, ‘‘தற்போது நடுவண் அரசால் வலியுறுத்த முயலுகின்ற புதிய கல்விக் கொள்கையில் இத்தகைய ஆணைக்கான விதை உள்ளது. பள்ளி இணைப்பு (School Comolex) என்ற பெயரில், பள்ளியின் நடைமுறையினைக் கவனிக்க சமுதாயத்திலுள்ளவர்களை உறுப்பினராகக் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு சாயல்தான் இது. மேலும் பள்ளித் தளவாடங்கள், உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குதல் போன்றவற்றிற்கு சமுதாயத்தினரையோ தொண்டு நிறுவனங்களையோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதாக உள்ளது. கற்பித்தலுக்கு அவர்களைப் பயன்படுத்துவதால் கற்பித்தல் நடைமுறை சீரழிவதோடு எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகள் ஏற்படாது; விரும்பத்தகாத எதிர்விளைவுகளே உருவெடுக்கும். அவ்வமைப்புகளின் கொள்கைகள் மாணவர்களிடையே புகுத்தப்பட்டு கல்வித் திட்ட நோக்கங்கள் தடம்புரளும் என்பதை இயக்குநர் அவர்கள் உணரவேண்டும்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews