👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்மைக் காலமாகத் தமிழக அரசின் தொடர்ச்சியான தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகள் பல்வேறு சீரழிவுகளுக்கு அடிகோலுவதாக இருக்கின்றது. அரசுப்பள்ளிகளைக் காக்கும் முயற்சிகளும் அதனூடாக வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுப் பார்வைக்கு நல்ல முன்னெடுப்புகளாக, பாராட்டத்தக்க நடவடிக்கைகளாகக் காட்சித் தந்தாலும் உண்மை நிலை பல்வேறு கசப்புகளைப் பறைசாற்றவனவாக உள்ளன.
கொல்லைப்புறமாகத் தனியார் பள்ளிகள் மீதான நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே காணப்படும் மோகத்தைப் பயன்படுத்தி, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களைத் தாரைவார்த்து அதற்கு உரிய கொள்ளைக் கட்டணத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கி வருவது கூர்ந்து நோக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அரசுப்பள்ளிகள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு விடாப்பிடியாக மேற்கொண்டு வருவது மிகவும் க நுட்பமாகவும் துரிதமாகவும் செயல்படுத்தி வருவதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
வெளிப்பார்வைக்கு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி என்றும் குழந்தை உளவியல் அடிப்படையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் அல்லது இருபது குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்னும் தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறைகளை நசுக்கி உரிய ஆசிரியர் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக உருமாற்றிக் காட்டி தம் விருப்பத்திற்கேற்ப கட்டாய மாறுதல் வழங்கி நீலிக் கண்ணீர் வடிப்பது அண்மைக்காலத் தொடர்கதை ஆகிவிட்டது வருந்தத்தக்கது.
உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர் கூடுதல் உயர் கல்வித்தகுதிக்கேற்ப முதுகலை ஆசிரியர்களாகப் பணியிட மாற்றம் பெறும் அதே சூழலில், அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தகுதிக் குறைக்கப்பட்டு புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் அங்கன்வாடிப் பள்ளிகளின் பயிற்றுநர்களாகப் பணியாற்ற வலியுறுத்துவது என்பது அநீதியாகும்.
பல பள்ளிகளுக்குக் குறித்த, குறிப்பிட்ட காலத்திற்குள் போய்ச் சேரவே முடியாத நிலை இன்றும் உள்ளது. போதிய வாகன வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத குக்கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய காணக் கிடைக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பரிதாப நிலையில் இணையவழியிலான பள்ளி, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை சார்ந்த பதிவுகளைப் பதியச் சொல்லிக் குரல்வளை நெரிப்பது எந்த வகையில் நியாயம்? அரசு இதற்கென எந்தவொரு வசதியும் நிதியும் வழங்காத நிலையில் அப்பாவி ஆசிரியர்கள் மீது அதிகார சாட்டையைச் சுழற்றுவது என்பது சரியல்ல.
மேலும், இரட்டைச் சவாரி செய்வது போன்று சற்றேறக்குறைய 100க்கு மேற்பட்ட பதிவேடுகளைத் தொடர்ந்து பராமரிக்கச் செய்வதும் அதே பதிவுகளைக் கல்வித் தகவல் மேலாண்மைத் தொகுப்பு (EMIS) எனும் இணையவழியில் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்துவதும் ஆசிரியர்களுக்கு மிகுந்த மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் அளிப்பதாக உள்ளன. மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் ஆசிரியர்கள் தம் கற்பித்தல் நிகழ்வுகளை மாணவர்களிடையே நிகழ்த்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது தான் உண்மை. அரக்கப்பரக்க செய்ய பாடப்பொருள்கள் ஒன்றும் துரித உணவுகள் அல்ல. கற்றல் என்பது ஒரு பூ மெல்ல மலருவதுபோல் நிகழும் அற்புத நிகழ்வாகும். மாணவர்கள் கற்றல் அடைவில் மாணவர்களின் நல்ல உற்சாக மனநிலை மட்டும் இருந்தால் போதாது. ஆசிரியரிடையே ஊக்கமும் தன் முனைப்பும் அமைதியான அகச்சூழலும் நிலவுவது இன்றியமையாதது. இத்தனை அலைக்கழிப்புக்கிடையில் எந்தவொரு ஆசிரியரின் கற்பித்தல் திறன் மேலோங்கும்?
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அண்மையில் அரசுக்கு எதிராக நடந்து முடிந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்களும் நிர்வாக அலுவலர்களும் ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களின் சிந்தனைகளை முடக்கும் பொருட்டு எப்போதும் ஒருவித நீண்ட நெடிய பயத்துடன் கூடிய பரபரப்புடன் வைத்திருப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் போலும்! அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் நியாயமான முறையில் போராடுவதும் தவறென்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் எடுத்துரைக்கவில்லை. ஆசிரியர்களை வீதிக்கு போராட வரவழைப்பதென்பது இழுக்கான செயலாகும்.
எல்லாவற்றிற்கும் போராடுவது ஆசிரியர்களின் வேலையுமல்ல. சமுதாய சிற்பிகளான ஆசிரியப் பெருமக்களை இழித்தும் பழித்தும் பேசுவதென்பது நல்லறமாகா. ஊதியத்தில் பெரும் இழப்புகளையும் முரண்பாடுகளையும் செயற்கையாகத் தோற்றுவிப்பதும் தகுதிக்குக் கீழான பணிகளைச் செய்ய அறிவுறுத்துவதும் நடுவுநிலையுடன் நோக்கத்தக்கது ஆகும். இதுபோன்ற மனவேதனைகளுடன் வகுப்பறையில் நுழையும் ஆசிரியரால் எங்ஙனம் நல்ல கற்பித்தலை வழங்க இயலும்? ஒவ்வொரு ஆசிரியர் முன்பும் இருப்பது இந்த நாட்டின் உயிர்! இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுகிறார்களோ இல்லையோ ஆசிரியர்கள் தம் துன்பங்கள் அனைத்தையும் மனத்திற்குள் ஆழப் புதைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் உயிரையும் உணர்வையும் கொண்டு உலகம் வியக்கத்தக்க வகையில் நல்ல தரமான கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது பாராட்டத்தக்கது.
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவரும் கொடுந்துயரமிக்க இச்சூழலில் மீண்டும் மீண்டும் வெந்தப் புண்ணில் கூர்வேல் பாய்ச்சி உழற்றுவதுபோல் தொடக்கக்கல்வித் துறை ஒழிப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொத்தடிமை நிலையிலிருந்து விடுதலை அளித்தது எம்.ஜி.ஆர் ஆவார். அதேபோல், பெரியண்ணன் மாதிரி ஒட்டுமொத்த அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்து வைத்துக்கொண்டு கோலோச்சிக் கிடந்த பள்ளிக்கல்வித்துறையை, நிர்வாக வசதிக்காகவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காகவும் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் முடிய உள்ள பள்ளிகளை நிர்வகிக்கும் பொருட்டு தொடக்கக்கல்வித்துறைத் தோற்றுவித்தது அன்று அம்மா வழியில் நடந்த அரசாகும். இந்த கடந்த கால வரலாறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகும்.
அத்தகைய பாரம்பரிய மிக்க தொடக்கக்கல்வித் துறையினை ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விட்டுவிடவோ, உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நடைபிணமாகவோ இருக்க முடியாது. கேட்க நாதியற்றுப் போன தொடக்கக்கல்வித் துறையின்கீழ் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களைப் பள்ளி இணைப்பு என்னும் பெயரில் அப்பணியிடங்களில் பணிபுரிவோரைத் தகுதிக் குறைத்து அப்பள்ளியின் ஏனைய ஆசிரியர்களுள் இவர்கள் மூத்த ஆசிரியர்கள் என்று தரம்தாழ்த்துவது என்பது சகிப்பதற்கில்லை. இக்கேலிக்கூத்து மிக்க இந்நடவடிக்கைகளால் பள்ளி நிர்வாகச் சூழல் முற்றிலும் சீர்குலையும்.
காட்டாக, ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்பதில் ஒரே வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுடன் தனித்துவத்துடன் தனியொரு நிர்வாகத்துடன் அதாவது தொடக்கக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளைக் கட்டாய ஒருங்கிணைப்பு மேற்கொண்டு இணைத்து ஒட்டுமொத்த பள்ளிக்கும் ஒற்றைத் தலைமையாசிரியரே நிர்வாகத் தலைவராகச் செயல்படுவார் என்பது வரவேற்கத்தக்கதாகத் தோன்றும். அதேவேளையில், அத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களை ஒழிக்க முயல்வதென்பது சரியல்ல. ஏனெனில், தலைமையாசிரியர் பதவி என்பது ஓர் அடையாளம்; அங்கீகாரம்; பதவி உயர்வு; தனி ஊதிய விகிதம் என பல பரிமாணங்களைக் கொண்டது. நேற்று வரை அதே பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் திறம்பட நிர்வாகம் புரிந்து வந்த நிலையில் திமிங்கலங்கள் உயிர் வாழ சிறு மீன்கள் மாண்ட கதையாக இன்று முதற்கொண்டு அதே பள்ளியில் பதவியிழந்து கைக்கட்டி வாய்ப்பொத்தி ஒரு மூன்றாம் மனிதராக மூத்த ஆசிரியர் எனும் உப்புச்சப்பில்லாத திடீர் பதவியுடன் பதவியிழக்கச் செய்து வேடிக்கைப் பார்ப்பது என்பது ஆசிரியர்கள் விரோதப்போக்காகும்.
தாம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பல்வேறு சிரமங்களையும் இன்னல்களையும் இடையூறுகளையும் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தொடர்ந்து போராடிவரும் சூழலிலும் மன அழுத்தத்திலும் மேலும் ஒரு கூடுதல் பணிச்சுமை என்பது தலைவலியாகத்தான் அமையும். பெரு நிர்வாகங்களை நிர்வாக வசதி கருதி சிறு மற்றும் குறு அலகுகளாகப் பிரித்து நல்ல நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தி வரும் இச்சூழலில் இருவேறு துறைகளாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறைகளை ஏதோ சில பல காரணங்களை முன்வைத்து மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்.
மேலும், பல்வேறு காரணங்களை முன்வைத்து பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்பது காலத்தின் கட்டாயம் என நிர்ப்பந்தம் செய்யும் நிலையில், தகுதிக் குறைப்புக்கு ஆளான தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் கூடுதல் உயர்கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டும் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளையே முன்னுரிமையாகக் கொண்டும் பட்டதாரி நிலைக்குத் தரம் உயர்த்தியோ அல்லது அதே நிலையில் தொடரச் செய்வதே உத்தமம். அதுபோல, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தகுதிக் குறைக்கப்படும் பட்டதாரி தலைமையாசிரியர்களை மேற்குறிப்பிட்ட வகையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது ஒருங்கிணைந்த பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் என்று பணியிடங்கள் ஊதிய விகிதம் மாறாமல் உருவாக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகையோரைத் தகுதிக் குறைப்புக்கு ஆளாக்கப் பள்ளிக் கல்வித்துறை முயற்சிக்கக் கூடாது. ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கும் மனக் காயங்களுக்கும் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் தொடக்கக்கல்வித்துறையைக் கபளீகரம் செய்ய நினைக்கும் பள்ளிக்கல்வித்துறை அலகு திறந்த மனத்துடன் சில சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கிட தாமாக முன்வருதல் சாலச்சிறந்தது. 'நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதிஊதி சமமாகச் சாப்பிடலாம்' என்று நினைப்பது நல்ல நடைமுறை ஆகாது. குறிப்பாக, தொடக்கக்கல்வித் துறை மீதான பள்ளிக் கல்வித்துறையின் அபகரிப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்கல்வித்துறையினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். ஆனால், ஏழை, எளிய, விளிம்புநிலை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பேரிழப்பே ஆகும். சீர்திருத்தம் என்னும் பெயரில் தொடக்கக்கல்வித் துறையில் சீரழிவுகள் தொடங்கி விட்டன என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த எண்ணமாக இருப்பது மறுப்பதற்கில்லை. பள்ளிகள் இணைப்பு சிலருக்கு வரமாகக் காட்சியளித்தாலும் பலருக்குத் துயரமாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து நல்ல தீர்வு காண முயற்சித்தல் அவசர அவசியமாகும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U