பள்ளியின் தரம் உயர்ந்தும் வகுப்பறை இல்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 05, 2019

பள்ளியின் தரம் உயர்ந்தும் வகுப்பறை இல்லை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விழுப்புரம் அருகே அதனூரில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளியில் மேற் கூரை சேதமடைந்ததாலும், கூடுதல் கட்டட வசதி இல்லாததாலும் மாணவர்கள் திறந்த வெளியில் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மேற்கூரையை அந்தப் பகுதி இளைஞர்களே, சொந்தமாக நிதி திரட்டி சீரமைத்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகேயுள்ள அதனூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்தப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 199 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி தரம் உயர்த்தப்பட்டபோதிலும், போதிய கட்டட வசதியில்லாமல், ஓடுகளால் வேய்ந்த பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டடத்தின் மேற்கூரையும் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆதலால், அங்கு பயின்று வந்த 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அருகிலுள்ள சிறிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் மரத்தடிக்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பரிதவிக்கும் நிலையைக் கண்ட அந்தப் பகுதி இளைஞர்கள், தாமாக முன் வந்து பள்ளி மேற்கூரையை சீரமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, அதனூர் கிராம மேம்பாட்டு நலச் சங்கம் மூலம் இளைஞர்கள் ரூ.50 ஆயிரம் வரை நிதி திரட்டி பழைய பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை ஓடுகளை மாற்றி புதுப்பிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பழைய பள்ளிக் கட்டடத்தின் ஓடுகள் உடைந்து, மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. அண்மையில், பெய்த மழையின் போது, வகுப்பு நடத்த இட வசதி இன்றி பள்ளிக்கு இரு நாள்கள் விடுமுறை விடப்பட்டது. ஆகவே, அந்தக் கட்டடத்தை சீரமைத்து, புதிய ஓடுகள் வேய்ந்து தர வேண்டுமென, காணை ஊராட்சி ஒன்றியத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை விடுத்தோம். பள்ளிக் கட்டடம் சீரமைக்க ஒப்பந்தம் விட்டாலும், பணிகள் நடைபெற 6 மாதங்களாகும். அதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். அந்தளவு நிதியை உடனடியாக வழங்க வழியில்லை என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கைவிரித்து விட்டனர். இதுகுறித்து கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, புதிய கட்டடத்துக்கு அனுமதி வந்துள்ளது. எனினும், போதிய இடவசதி இல்லாததால் கட்டடப் பணி தாமதமாகி வருவதாகக் கூறுகின்றனர். ஆகவே, நாங்களே களமிறங்கி சீரமைப்புப் பணி மேற்கொண்டுள்ளோம். இந்தப் பணி ஓரிரு நாளில் நிறைவடையும். ஆசிரியர்கள் பற்றாக்குறை: இது ஒரு புறம் இருக்க, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்கள் இங்கு இல்லை. தற்போது, 3 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். அவர்களே வகுப்புகளைப் பிரித்து பாடம் நடத்தி வருகின்றனர். மற்ற நேரங்களில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் வெறுமனே அமர்ந்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாததால் திணறி வருகின்றனர். ஆகவே, தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு புதிய கட்டட வசதியை ஏற்படுத்தி கூடுதல் ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க மாவட்ட ஆட்சியர், கல்வித் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews