தேவையில்லாத தேர்வு: தினமணி தலையங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

தேவையில்லாத தேர்வு: தினமணி தலையங்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடப்புக் கல்வியாண்டிலிருந்து 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது என்கிற தமிழக பள்ளிக் கல்வித் துறையின் திட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருசில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்றாலும்கூட, பெரும்பாலான கல்வியாளர்களும் சமூகவியலாளர்களும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். விவாதப் பொருளாகியிருக்கும் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுத் திட்டம் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவிலான கல்வியின் தரம் குறித்த விவாதம் மிகவும் அவசியமாகிறது. உயர்நிலைப் பள்ளி அளவில் படிக்கும் மாணவர்களில் பலர் எழுத்துப் பிழையோ, வாக்கியப் பிழையோ இல்லாமல் எழுதவோ, அடிப்படைக் கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்யவோ முடியாத நிலையில்தான் உள்ளனர் என்கிற திகைப்பூட்டும் ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. கல்வியின் தரம் இந்த அளவுக்குக் குறைந்து காணப்படுவதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஆசிரியர்களின் தரமும் மெச்சும்படியாக இல்லை என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில், கல்வியின் தரத்தை உயர்த்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானதாகத்தான் இருக்கும். கற்பித்தலின் தரம் உயராமல் கல்வியின் தரம் உயராது என்கிற அடிப்படை இலக்கணத்தை நாம் உணர வேண்டும். 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும்போதுதான் மாணவர்கள் மத்தியில் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் பொறுப்புணர்வும் வரும் என்பதும், அப்போதுதான் ஆசிரியர்களும் தேர்ச்சி விகிதத்தை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள் என்பதும், தனது முடிவுக்கு பள்ளிக் கல்வித் துறை முன்மொழியும் காரணங்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் கடமையைச் செய்ய ஆசிரியர்களைத் தூண்டுவதற்காக, பிஞ்சு உள்ளங்களைப் பொதுத் தேர்வுக்கு ஆட்படுத்த முற்படுவது மனிதாபிமானத்தின் அடிப்படையிலான முடிவாகத் தெரியவில்லை.
8-ஆம் வகுப்பு வரை எந்தவிதமான தேர்வும் தேவையில்லை என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளுக்குத் தேர்வே தேவையில்லை; அனைவரும் எந்தவிதமான தேர்வுக்கும் உட்படுத்தப்படாமல் 8-ஆம் வகுப்பு வரை கடந்து செல்லலாம் என்கிற நடைமுறை, கல்வியின் தரத்தை கடுமையாகச் சீரழித்திருக்கிறது என்கிற எதார்த்த உண்மையை பலரும் உணர மறுக்கிறார்கள். தேர்வின் அடிப்படையில் குழந்தைகள் அடுத்த வகுப்புக்குப் போவது தடைபடும்போது, அவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற வாதம், அந்தக் குழந்தைகளின் நிகழ்கால மகிழ்ச்சிக்கு உதவுமே தவிர, வருங்கால வாழ்க்கைக்குப் பயனளிக்காது. மேலை நாட்டு கல்வியாளர்களின் அவ்வப்போதைய கருத்துகளின் அடிப்படையில் இந்தியக் கல்வியாளர்கள் நமது கல்வி முறையை அமைத்துக்கொள்ள முற்பட்ட அவலத்தின் வெளிப்பாடுதான் முந்தைய கல்வி முறையும், இப்போதைய அணுகுமுறையும். அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வரை இருந்த கல்வி முறையில் மனனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது உண்மை. அதற்கு அறிவியல் ரீதியாக சில காரணங்கள் இருந்தன. குழந்தைகள் மீது உடல் ரீதியான வலுவைத்தான் ஏற்றக்கூடாதே தவிர, அறிவு ரீதியாக அவர்களது மூளையில் எவ்வளவுக்கு எவ்வளவு பதிவேற்றம் செய்யப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைகள் புத்திசாலியாகிறார்கள் என்பது காலங்காலமாக ஆசிய நாடுகள் பின்பற்றி நிரூபித்திருக்கும் உண்மை. மனனக் கல்வித் திட்டத்தில் படித்த நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமனும், அணு விஞ்ஞானி டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமும் புரிந்திருக்கும் சாதனைகளை எண்ணிப் பார்க்கும்போது, அந்தக் கல்வி முறை முற்றிலும் தவறானது என்று இன்றைய கல்வியாளர்கள் புறந்தள்ளுவது உண்மைக்குப் புறம்பானது என்பது நிரூபணமாகிறது. இப்போதைய கல்வி முறையில் கடைப்பிடிக்கப்படும் பருவ முறை குழந்தைகளைத் தகுதி அடிப்படையில் அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்கிறதே தவிர, புரிதல் அடிப்படையில் கசடறக் கற்பதை உறுதி செய்வதில்லை. அதை உறுதி செய்வதற்குத் தேர்வு முறை அவசியம்.
அதேநேரத்தில், குழந்தைகளை 5, 8-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வுக்கு உட்படுத்துவது என்பது அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மிகப் பெரிய அழுத்தம். பழைய கல்வி முறையில் 10-ஆம் வகுப்பு அல்லது 11-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்படும்போது குழந்தைகள் பதின்ம வயதை எட்டிவிடுவதால் அவர்களால் அதை எதிர்கொள்ள இயலும். போட்டியையும் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அந்த வயதில் ஏற்படுத்துவது என்பது அவசியமும்கூட. அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள அந்த அழுத்தம் தேவைப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்து பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் நாட்டம் எந்தத் துறையில் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு, அவர்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிநடத்த முற்படுவதுதான் ஆக்கப்பூர்வ அணுகுமுறை. அதை விட்டுவிட்டு 5, 8-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும்போது பிஞ்சு உள்ளங்களில் அழுத்தம் ஏற்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் சமச்சீரில்லாத போட்டிக்கும் உட்படுத்தப்படுவார்கள். நகர்ப்புற மாணவர்களுடனும், தனிப் பயிற்சி (டியூஷன்) மூலம் தயார்படுத்தப்படும் மாணவர்களுடனும், அடித்தட்டு குழந்தைகளையும், முதல் தலைமுறை கல்வி பெறும் குழந்தைகளையும் பொதுத் தேர்வில் போட்டிபோட வைப்பது சமூக நீதியல்ல. தரமான ஆசிரியர்களும், தன்னம்பிக்கையுள்ள குழந்தைகளும் பள்ளிக் கல்வித் துறையின் இலக்காக வேண்டும். எல்லா வகுப்புக்கும் தேர்வு வேண்டும்; ஆனால், 10-ஆம் வகுப்புக்கு முன்னால் பொதுத் தேர்வு கூடாது!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews