அரசுப் பள்ளிக்கு "படையெடுக்கும்' தனியார் பள்ளி மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

அரசுப் பள்ளிக்கு "படையெடுக்கும்' தனியார் பள்ளி மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறை, மேம்படுத்தப்பட்ட குடிநீர், கழிப்பறை, ஆய்வக வசதிகளுடன் கூடிய நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும் ஈர்க்க தொடங்கியிருப்பது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு அரசுப் பள்ளி வீதம் 32 பள்ளிகளைத் தேர்வு செய்து மாதிரி பள்ளியாக உருவாக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டது. .
அதன்படி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. மாதிரி பள்ளிகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப் பள்ளிக்கு 2 கட்டங்களாக ரூ.30 லட்சம் நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பள்ளியில் 5 பொலிவுறு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அறிவியல் ஆய்வகம் மற்றும் கணினி வகுப்பறை ஆகியன தனியார் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், பள்ளியிலுள்ள 42 வகுப்பறைகளிலும் ஒலிப் பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. கூடவே, பள்ளி வளாகம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி உதவியோடு, முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1.20 லட்சம் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பாக ரூ.50ஆயிரத்துடன், மாணவர்களுக்கு தேவையான மேலும் பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பள்ளி வளாகம் முழுவதும் மரங்களை வளர்த்ததோடு, வகுப்பறை கட்டங்களின் முன் புறம் புற்களை வளர்த்து பசுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் நிகழாண்டு இப்பள்ளி வளாகத்திலேயே மழலையர் வகுப்புகளும் (எல்கேஜி, யுகேஜி) தொடங்கப்பட்டுள்ளன. மழலையர் வகுப்பறைகளின் தோற்றம், தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 5 வரையிலான வகுப்பறைகளின் சுவர்கள் பல வண்ண ஓவியங்களுடன் மாணவர்களை ஈர்க்கும் வகையில் புதுப் பொலிவு பெற்றுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நத்தம் வர்த்தகர் சங்கத்தின் துணையுடன் பள்ளி நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் நத்தம் துரைக்கமலம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்திருப்பது, தற்போது மாணவர் சேர்க்கையின் மூலம் எதிரொலித்துள்ளது. கடந்த ஆண்டு வரை 1,484 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வந்தனர். இந்நிலையில், நிகழாண்டில் ஜூன் 3 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 592 மாணவர்கள் இப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில், நத்தம் பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசுப் பள்ளியை நோக்கி திரும்பியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.திருநாவுக்கரசு கூறியது: கடந்த 1951ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய இப்பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாகவே சிறப்பாக செயல்பட்டு வந்தது.
ஆனாலும் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழலில், மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் ரூ.30 லட்சம் செலவில் அந்த வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி நுழைவுவாயில் பகுதியில் சூழல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் மழலையர் வகுப்பறையும் பொலிவுறு வகுப்பறையாக மாற்றப்பட உள்ளது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்களும் இந்த முறை அரசுப் பள்ளிக்கு திரும்பியிருப்பது, மாதிரி பள்ளி என்ற அரசின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது. அதேபோல் கடுமையாக முயற்சி மேற்கொண்டு வந்த எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஒரே நாளில் 592 மாணவர்கள் சேர்க்கை நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மட்டும் எல்கேஜி வகுப்பில் 57 மாணவர்கள், யுகேஜியில் 26, 1ஆம் வகுப்பு - 33, 2ஆம் வகுப்பு 22, 3ஆம் வகுப்பு 24, 4ஆம் வகுப்பு 27, 5ஆம் வகுப்பு 22, 6ஆம் வகுப்பு 51, 7ஆம் வகுப்பு 32, 8ஆம் வகுப்பு 10, 9 ஆம் வகுப்பு 240, 10 ஆம் வகுப்பு 3, 11ஆம் வகுப்பு 240 பேர் வீதம் மொத்தம் 592 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews