கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், 35; பெரம்பலுார், தனியார் மருத்துவ கல்லுாரி, உதவி பேராசிரியர். நேற்று காலை, 11:00 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த கோபிநாத், அலட்சியமாக இருந்த ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான, சர்கார் பட பாணியில், '49 பி' விதியின்படி, '17 - பி' படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, '17 - ஏ' படிவத்தில், அவரது ஓட்டை, கோபிநாத் பதிவு செய்தார்.
இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது; அவருக்கும், '49 பி' விதியின் கீழ் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து, தேர்தல்அதிகாரிகள் கூறியதாவது:கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், 'பான் கார்டு' ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின், கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன.
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது.'சிசிடிவி' கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் லோக்சபா தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவதராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன், 32, என்பவரது ஓட்டும், அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.
குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச்சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, '49 பி' விதியின் கீழ் ஓட்டளித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், '49 பி' ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
- நமது நிருபர் குழு --
கோவையில், 'சர்கார்' பட பாணியில் இரண்டு இளைஞர்களின் வாக்குகளைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டனர்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர், இன்று காலை வாக்களிப்பதற்காக அருகில் உள்ள வாக்குசாவடிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவரது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் ,அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், "நான் கடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்திருந்தேன். தற்போது இரண்டாவது முறையாக வாக்களிக்க இருந்தேன். ஆனால், நான் வருவதற்கு முன்பே எனது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டார். அதிகாரிகளிடம் கேட்டால், என்னை ஒருமையில் திட்டுகின்றனர். நான் தொடர்ந்து கேட்டதால், "ஏதாவது ஒரு பட்டனை அழுத்திட்டு போ. இல்லாட்டி எங்களுக்கு பிரச்னை ஆகிடும்" என்றனர். எவ்வளவு அலட்சியமாக இருந்தால் இப்படிப் பேசுவார்கள். அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்கு முழுக் காரணம்" என்றார்.
அதேபோல, ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, பெங்களூரில் பணியாற்றிவருகிறார். இவர், வாக்களிப்பதற்காக ரயில்மூலம் இன்று கோவை வந்துள்ளார். வாக்களிக்கச் சென்றபோது, அவரது வாக்கும் ஏற்கெனவே செலுத்திவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு விவகாரங்களும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருவரிடமும் வருத்தம் தெரிவித்த ராசாமணி, அவர்கள் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடுசெய்தார். மேலும், அதிகாரிகளை கவனத்துடன் பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U