தனியார் வங்கியில் பெற்ற வீட்டுக் கடன் தொகையிலிருந்து அரசுப் பள்ளிக்கு ரூ. 3.60 லட்சத்தில் கணினிகளை வாங்கித் தந்த ஆசிரியர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 03, 2018

தனியார் வங்கியில் பெற்ற வீட்டுக் கடன் தொகையிலிருந்து அரசுப் பள்ளிக்கு ரூ. 3.60 லட்சத்தில் கணினிகளை வாங்கித் தந்த ஆசிரியர்!

தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடன் தொகையிலிருந்து தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு ரூ. 3.60 லட்சத்தில் 11 கணினிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் அப் பள்ளியின் கணித ஆசிரியர். தருமபுரி மாவட்டம், கடத்தூருக்கு அருகேயுள்ளது ரேகடஅள்ளி கிராமம். ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மொத்தம் 135 பேர் பயிலும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆர். மதனகோபாலன். மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியிலிருந்து வரும் தனது பள்ளி மாணவர்கள் கணினியைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதற்காக 11 கணினிகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
வெறுமனே கணினிகள் வாங்கித் தருவதோடு இருந்துவிடாமல், கணினி அறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தரை தரம் உயர்த்துதல், வண்ணமடித்தல், மேசைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், இப் பள்ளியிலுள்ள நூலகத்தை மேம்படுத்தும் வகையில் 450 நூல்களையும் வாங்கி வழங்கியுள்ளார். இந்தக் கொடையாளி எம்.எஸ்ஸி., எம்.எட்., முடித்தவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் தினமணி செய்தியாளரிடம் கூறியது: வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ. 3 லட்சம் கடன் கேட்டிருந்தேன். என்னுடைய வருமான விவரங்களைப் பெற்ற அவர்கள் ரூ. 5 லட்சம் அளித்தனர்.
அதன்பிறகு மீதமுள்ள தொகையில் பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். பின்தங்கிய கிராமப் பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை அறியாதவர்கள். ஒரு கணினி வகுப்பறையை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் உருவானது. 11 கணினிகளை வாங்கினேன். ஏற்கெனவே காலியாக இருந்த ஓர்அறையை தரையைத் தரப்படுத்தி, சுவர்களில் வண்ணம் பூசி, கணினிகளுக்கான மேஜைகளையும் வாங்கினேன். அப்போதும் மீதம் கொஞ்சம் தொகை இருந்தது. அதிலிருந்து நூலகத்துக்காக 450 நூல்களை வாங்கினேன். மொத்தம் ரூ. 3.60 லட்சம் செலவானது.
எல்லாவற்றையும் நிறைவாக முடித்த பிறகு அது எனக்குப் பெரிய செலவாகத் தெரியவில்லை. மாணவர்கள் தங்களது கல்வித் தேவைகளை இங்கே நிறைவாகப் பூர்த்தி செய்து கொள்வார்கள். எனது மறைந்த தந்தை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர். மாணவர்களுக்கு ஏதாவது செய்தோம் என்கிற மனநிறைவே போதும் என்றார் மதனகோபால். அண்மையில் நடைபெற்ற விழாவில், இந்தக் கணினி அறையைத் திறந்து வைத்து, இதனை உருவாக்கித் தந்த ஆசிரியர் ஆர். மதனகோபாலைப் பாராட்டிச் சென்றுள்ளார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி. பாடத்தைத் தவிர கூடுதலாக ஒரு சொல்லையோ, செயலையோ வகுப்பறைக்குள் மேற்கொள்ளாத ஆசிரியர்கள் பெருகிவிட்டார்கள் என்ற பெரும் குற்றச்சாட்டுக்கும் மத்தியில் மதனகோபால் பாராட்டுக்குரியவரே!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews